புத்ராஜெயா: மலேசியாவின் தேசிய தினக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக ஈராயிரம் மாணவர்கள் இணைந்து படைத்த பேரளவிலான மனிதவரைகலை காட்சியை வியந்து பாராட்டியுள்ளார் அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம்.
தேசிய தின விழாவில் பங்கெடுத்த இளம் கலைஞர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) அன்று வாழ்த்து கூறிய திரு அன்வார், “நம் பிள்ளைகளைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். மலேசியாவின் வரலாற்றிலேயே ஆகச் சிறந்த நிகழ்ச்சி இதுவாகும். பிள்ளைகள் நன்றாகப் கற்று சிறந்திட தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்” என்றார்.
அக்காட்சி தாம் இதுவரை கண்டிராத சிறப்பான படைப்பு என்று கூறிய பிரதமர், அணிவகுப்புக்குப் பிறகு அக்குழுவினரை சந்தித்து அவர்களின் முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததாகக் கூறினார் மலேசிய தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில்.
பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட அக்குழு இந்த நிகழ்ச்சிக்காக இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பயிற்சி பெற்றதாகக் கூறிய அமைச்சர், 68வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் சுமார் 10,000 பேர்வரை பங்கேற்றனர் என்றும் கூறினார்.
மாமன்னருக்கான வாழ்த்து, நாட்டின் ஒற்றுமை உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கும் சொற்றொடர்களை இந்த வரைகலையில் கண்முன் கொண்டுவந்த மாணவர் குழுவினர், தேசப்பற்றுமிக்க பாடல்கள் உள்ளிட்ட கலைப்படைப்புகளையும் படைத்தனர்.
கொண்டாட்டங்கள் முடிந்ததும், அங்கு கூடியிருந்த பார்வையாளர்களையும் பொதுமக்களையும் சந்தித்தார் அன்வார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் பங்கேற்ற மலேசிய துணைப் பிரதமர் அஹ்மத் ஸாஹித் ஹமிடி ‘’தேசத்தின் வேற்றுமைகளைத் ஒதுக்கி வைப்போம்; அனைத்து மலேசியர்களிடையேயும் ஒற்றுமை தொடர்ந்து வளரட்டும்,” என்று குறிப்பிட்டு நாட்டு மக்களுக்குத் தமது தேசிய தின வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டார்.

