2027ல் உலகின் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்கள் பட்டியலில் அன்வாருக்கு 13ஆம் இடம்

2027ல் உலகின் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்கள் பட்டியலில் அன்வாருக்கு 13ஆம் இடம்

படம்: மலாய் மெயில்

13 Nov 2026 - 12:39 pm

2 mins read

கோலாலம்பூர்: ஜோர்தானைத் தளமாகக் கொண்ட அரச இஸ்லாமிய உத்திபூர்வ ஆய்வு நிலையம் வெளியிட்ட 2027ஆம் ஆண்டுக்கான ‘உலகின் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்கள்’ என்ற பட்டியலில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் 13ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

https://themuslim500.com என்ற இணையத்தளத்தில் கிடைக்கும் இந்த 18வது ஆண்டுப் பதிப்பின்படி, திரு அன்வார் 2022 நவம்பரில் மலேசியாவின் 10வது பிரதமராகப் பதவியேற்று, பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின்கீழ் ஒற்றுமை அரசாங்கத்தை வழிநடத்தி வருகிறார் என்று அந்தப் பதிப்பு குறிப்பிட்டுள்ளது.

நிதி அமைச்சருமான திரு அன்வார், தமது தனித்துவமான ‘மலேசியா மடானி’ கட்டமைப்பின்கீழ், மலேசியாவிற்கான வலுவான மின்னிலக்க, பொருளியல் மாற்றத்திற்கான உத்திக்கு முன்னுரிமை அளித்தார் என்றும் செயற்கை நுண்ணறிவு, பகுதி மின்கடத்திகள், தரவு நிலையங்கள், குவான்டம் கணினி, எரிசக்தி மாற்றம் ஆகியவற்றைத் தமது அரசாங்கத்தின் உத்திபூர்வ நிகழ்ச்சி நிரலின் மிக முக்கிய அம்சங்களாக வைத்தார் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.

“2026 ஜூனில், மலேசியாவின் வளர்ச்சித் திட்டங்களில் முக்கியத் தூணாக எரிசக்தி மாற்றத்தைத் திரு அன்வார் முன்னிலைப்படுத்தினார். இது நாட்டின் எதிர்கால எரிசக்தித் தேவைகளை, அதன் உயர் தொழில்நுட்ப உள்கட்டமைப்புத் துறைகளின் விரைவான விரிவாக்கத்துடன் நேரடியாக இணைக்கிறது,” என்று அது கூறியது.

வட்டார அளவில், தென்கிழக்காசியாவில் ஆக்கபூர்வமான சமாதானத் தூதராகத் திரு அன்வார் ஆற்றிய பங்கை அந்தப் பிரசுரம் விவரித்தது. குறிப்பாக, 2025 ஜூலையில் நடந்த எல்லை மோதல்களைத் தொடர்ந்து தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே பதற்றத்தைத் தணிப்பதிலும் நம்பிக்கையை வளர்ப்பதிலும் அவர் மேற்கொண்ட அரசதந்திர முயற்சிகளை அது குறிப்பிட்டது.

“மலேசியாவின் பிரதமராகவும் ஆசியான் தலைவராகவும் அவர் புத்ராஜெயாவில் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அது போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்த உதவியது. பேங்காக்கிற்கும் புனோம்பென்னிற்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கத் திரு அன்வார் உதவினார். இதன் மூலம் தென்கிழக்காசியாவில் ஆக்கபூர்வமான சமாதானத் தூதராக மலேசியாவின் பிம்பத்தை அவர் வலுப்படுத்தினார்,” என்று அந்த அறிக்கை கூறியது.

மேலும், காஸாவில் பொதுமக்களின் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகளுக்கான அரசின் தளராத ஆதரவை வழங்குவதோடு பாலஸ்தீன விவகாரம் குறித்து உலகில் மிகவும் வெளிப்படையாகப் பேசுகின்ற நாட்டுத் தலைவர்களில் ஒருவராகவும் திரு அன்வாரை ‘த முஸ்லிம் 500’ அமைப்பு அங்கீகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
அன்வார்முஸ்லிம்காஸா