மத்திய கிழக்கு நெருக்கடி குறித்து ஆசியான் அமைச்சர்கள் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி குறித்து ஆசியான் அமைச்சர்கள் சந்திப்பு

2 mins read
993a5e96-c9eb-4e3e-b1ce-304fb152016c
ஆசியான் பொருளியல் அமைச்சர்களின் 32வது கூட்டம் பிலிப்பீன்ஸின் மனிலாவில் நடைபெறுகிறது. - படம்: ஏஎஃப்பி

மணிலா: மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் பதற்றநிலையால் ஏற்பட்ட பாதிப்புகளை எப்படிச் சமாளிப்பது என்று ஆசியான் நாடுகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) கலந்துரையாடவிருக்கின்றன.

ஆசியானுக்கு இவ்வாண்டு தலைமையேற்கும் பிலிப்பீன்ஸ், ஆசியான் பொருளியல் அமைச்சர்களின் கூட்டத்தை ஏற்று நடத்துகிறது.

அதிகரித்துவரும் எண்ணெய் விலைகளால் ஏற்றுமதிகள், தளவாடங்கள், வர்த்தகம் ஆகியவை பேரளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அவை, ஏற்றுமதியை அதிகம் சார்ந்திருக்கும் ஆசியான் நாடுகளின் பொருளியல்களைப் பாதித்துள்ளன.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குமுன் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் தொடுத்ததை அடுத்து உலகளாவிய நிலையில் எரிசக்திச் சந்தைகளும் போக்குவரத்துக்கும் நிலைகுலைந்தன.

பூசல் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் எண்ணெய் ஏற்றுமதி நிலைகுத்தியது. அதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு $100 அமெரிக்க டாலருக்கு மேல் உயர்ந்தது.

தென்கிழக்காசிய நாடுகளுக்கு அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் இணையம்வழி சந்தித்துப் பேசவிருக்கின்றனர்.

ஆசியானின் பெரும்பாலான பொருளியல்கள் வளைகுடா நாடுகளிலிருந்து வரும் கச்சா எண்ணெய்யையும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவையும் சார்ந்திருக்கின்றன.

மத்திய கிழக்குப் பதற்றத்தால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க பல்வேறு ஆசியான் நாடுகள் மாற்றுவழிகளை அமல்படுத்தியுள்ளன.

எரிபொருளை மிச்சப்படுத்த வாரத்திற்கு நான்கு நாள்கள் மட்டும் வேலை செய்தால் போதும் என்ற நடைமுறையை பிலிப்பீன்ஸ் அரசாங்கம் அறிமுகம் செய்தது.

அனைத்துலகச் கச்சா எண்ணெய் விலைகள் சற்றுக் குறைந்ததை அடுத்து வியட்னாம் அதன் சில்லறை வர்த்தக எண்ணெய் விலைகளைக் குறைத்துக்கொண்டது.

இம்மாதத் தொடக்கத்தில் தாய்லாந்தும் லாவோஸ், மியன்மார் தவிர்த்துப் பிற நாடுகளுக்கான எரிசக்தி ஏற்றுமதியைத் தற்காலிகமாக நிறுத்திக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்