மான்செஸ்டர்: பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் உள்ள யூதர் தேவாலயம் ஒன்றில் நடந்த தாக்குதலில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தக நபர் என்று நம்பப்படுபவரும் மாண்டுவிட்டதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது. காவல்துறைச் சுட்டதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
வியாழக்கிழமை (அக்டோபர் 2) கத்திக்குத்துத் தாக்குதலுடன் காரைப் பொதுமக்கள் மீது மோதியும் தாக்குதல் நடந்ததாக பிரிட்டிஷ் காவல்துறை முன்னதாகக் கூறியது. நால்வர் காயமுற்றதாக முதலில் செய்தி வெளியானது.
தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுபவரை அதிகாரிகள் சுட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மான்செஸ்டர் நகரின் கிரம்ப்சால் பகுதியில் உள்ள ஹீட்டன் பார்க் கோங்கிரிகேஷன் யூதர் தேவாலயத்தில் (Heaton Park Hebrew Congregation Synagogue) ஒரு சம்பவம் நிகழ்ந்ததாகக் காவல்துறைக்குத் தகவல் வந்தது. ஒரு கார் பொதுமக்கள் மீது மோதியதாகவும் ஆடவர் ஒருவர் கத்திக்குத்துக்கு ஆளானதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறியிருக்கிறார்.
ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். தாக்குதல் நிகழ்த்தியதாக நம்பப்படும் ஆடவரைக் காவல்துறை சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள யூதர் தேவாலயங்களில் கூடுதல் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவர் உஎன்று பிரிட்டிஷ் பிரதமர் கெயர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார் என்று பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.
யூதர்கள் புனித நாளாகக் கருதும் யோம் கிப்புர் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாப்படுகிறது. இவ்வேளையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.