துபாய்: ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் வியாழக்கிழமை (நவம்பர் 5) மேலும் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் சேதமடைந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.
வளைகுடாப் போர் முடிவுக்கு வராதவரை கடல்வழிப் போக்குவரத்திற்கு ஆபத்து நீடிக்கும் என்பதை இச்சம்பவம் உணர்த்துவதாகக் கூறப்பட்டது.
அமெரிக்க இடைத்தவணைக்காலத் தேர்தலில் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி நாடாளுமன்றக் கட்டுப்பாட்டை இழந்தது. இந்தத் தோல்விக்குப் போரே காரணம் எனத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் குற்றஞ்சாட்டினார்.
இதற்கு வியாழக்கிழமை ஈரானிய நாடாளுமன்ற நாயகர் முகம்மது பாக்கர் கலிபாஃப் பதிலளித்தார். மேலும் பல அமெரிக்கத் தாக்குதல்களைத் திட்டமிடுவதன் மூலம், திரு டிரம்ப் அவரின் பிடிவாதத்தை இரட்டிப்பாக்குவதற்குத் திரு வான்ஸ் இடமளிப்பதாகக் குறைகூறினார்.
இந்தப் போர் ஒரு தவறு என்று திரு வான்ஸ் நம்பினால், அவர் அமெரிக்க அதிபரைச் சமாதானப்படுத்தி அதை நிறுத்தச் செய்ய வேண்டும் என்று திரு கலிபாஃப் கூறினார்.
" ‘டெட் டாக்’ பேசுவதை நிறுத்துங்கள். இதை ஏன் உங்கள் தலைவரிடம் சொல்லக்கூடாது?," என்று அவர் கேள்வி எழுப்பினார்.
திரு டிரம்ப் ஈரான்மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று வர்த்தகர்கள் கருதியதால், அண்மை நாள்களில் கச்சா எண்ணெய் விலை சரிந்தது. வியாழக்கிழமை விலை சற்று மீண்டபோதிலும் கடந்த வாரத்தைவிட பீப்பாய்க்கு 20 அமெரிக்க டாலருக்கும் மேல் குறைந்துள்ளன.
மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பரிந்துரைகள் குறித்து விவாதிக்க, ஈரானிய அதிகாரிகள் கடந்த வாரத்திலிருந்து கத்தாரின் சமரசப் பேச்சாளர்களைச் சந்தித்து வருகின்றனர். இருப்பினும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் இரு தரப்பினரும் இதுவரை எந்தவொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிடவில்லை.
கப்பல்கள்மீது தொடரும் தாக்குதல்கள்
வளைகுடாவில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை முதல் குறைந்தது ஐந்து கப்பல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனின் கடல்துறைப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது. சென்ற அக்டோபர் மாதத்தில் மட்டும் 35 கப்பல்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத இரண்டு எறிபடைகள் தாக்கியதில் ஒரு கப்பல் சேதமடைந்தது.
இரண்டு கப்பல்கள் கண்ணிவெடிகளில் சிக்கியதாகவும் மற்றொன்றில் தீப்பிடித்ததாகவும் ஈரானின் புரட்சிக் காவற்படை கூறியது. டெஹ்ரானின் ஒத்துழைப்பின்றி இந்தப் பாதை பாதுகாப்பானதாக இருக்க முடியாது என்றும் அது எச்சரித்தது.
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அமெரிக்கா ஈரான்மீது பகைமையுடனேயே இருக்கும் என்று ஈரானிய உச்சத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா காமெனி கூறியுள்ளார்.
