சுற்றுப்பயணிகளைப் போல் நடித்து தாய்லாந்திலிருந்து 375 கிலோகிராம் எடைகொண்ட கஞ்சாவைக் கடத்த முயற்சி செய்த 13 பேர் அந்நாட்டு விமான நிலையம் ஒன்றில் கைது செய்யப்பட்டனர் என்று உள்ளூர் ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) தெரிவித்தன.
கைதான 13 பேரில், 12 பேர் சிங்கப்பூருக்கு வரவிருந்தவர்கள். மற்றொருவர் ஹாங்காங் செல்லவிருந்தார் என்று பேங்காக் போஸ்ட் ஊடகம் குறிப்பிட்டது.
பிரிட்டன், ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அவர்கள் கடைசியாகப் பயணம் மேற்கொள்ளவிருந்தனர்.
கஞ்சாவை வெளிநாடுகளுக்குக் கடத்திச் செல்வதெற்கென்றே அந்தச் சுற்றுப்பயணிகளில் சிலர் ‘நியமிக்கப்பட்டதாக’ பேங்காக் போஸ்ட் தெரிவித்தது. கஞ்சாவை வெற்றிகரமாகக் கடத்தியதற்குக் கைமாறாக அவர்களுக்குப் பணம் வழங்கப்படும் அல்லது அவர்களின் கடன் அடைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.
சம்பந்தப்பட்ட கஞ்சா, தாய்லாந்தின் சாமுய் விமான நிலையத்தில் 22 பைகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை விற்று சுமார் 75 மில்லியன் பாட் (2.97 மில்லியன் வெள்ளி) தொகையை ஈட்ட முடியும்.
கைதானோரில் நால்வர் பிரிட்டனைச் சேர்ந்த ஆடவர்கள். அவர்கள் சாமுய் விமான நிலையத்தில் சனிக்கிழமை (மார்ச் 15) கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த எட்டுப் பெட்டிகளில் 131 கிலோகிராம் எடைகொண்ட உலர்ந்த கஞ்சா இருந்தது.
அந்த ஆடவர்கள், ஆன்டனி, 63, பிலி, 37, ஃபில்ட், 63, ஜான், 34 என பேங்காக் போஸ்ட் அடையாளம் கண்டுள்ளது.
பெட்டிகளும் பைகளும் சோதனையிடப்பட்டபோது அவற்றில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அப்போது அந்த நால்வரும் சாமுய் விமான நிலையத்திலிருந்து தப்பியோடினர்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கஞ்சா கடத்தியது, கஞ்சா கட்டுப்பாட்டு சட்டத்தை மீறியது ஆகியவற்றின் தொடர்பில் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அந்த ஆடவர்கள், சுற்றுப்பயணிகளாக தாய்லாந்துக்குச் சென்றுவர ‘நியமிக்கப்பட்டவர்கள்’ என்று சுராட் தானி குடிநுழைவு காவல்துறையினர் தெரிவித்தனர். விமான, ஹோட்டல் செலவுகள் அவர்களை அனுப்பியவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்வதற்கு முன்பு கஞ்சாவை முதலில் சிங்கப்பூருக்குக் கொண்டுபோகுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
கஞ்சா கடத்திய இதர ஒன்பது வெளிநாட்டவர் முன்னதாக சாமுய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 16), தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு தம்பதியர் தவறுதலாக ஒரு பெட்டியை ஜப்பான் கொண்டு சென்றனர். அதுவும் கஞ்சா கடத்தல் தொடர்பான சம்பவமாக இருக்கலாம் என்று காவல்துறை மேஜர் ஜெனரல் செர்ம்பான் சிரிக்கோங் தெரிவித்தார்.
ஜப்பானில் திறக்கப்பட்ட அப்பெட்டியில் 24 கிலோகிராம் உலர்ந்த கஞ்சா இருந்தது. அந்தப் பெட்டி 51 வயது பிரிட்டிஷ் ஆடவர் ஒருவருக்குச் சொந்தமானது.
அவர், இம்மாதம் ஆறாம் தேதி தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள சுவர்னபூமி விமான நிலையத்தைச் சென்றடைந்ததாக பேங்காக் போஸ்ட் குறிப்பிட்டது