பங்குச்சந்தை விதிமீறலை முன்னிட்டு தடை: இந்தோனீசிய நிதி ஆணையம்

பங்குச்சந்தை விதிமீறலை முன்னிட்டு தடை: இந்தோனீசிய நிதி ஆணையம்

படம்: ராய்ட்டர்ஸ்

04 Nov 2026 - 3:19 pm

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் நிதி ஒழுங்குமுறை ஆணையம், பங்குச் சந்தை விதிமீறல் குற்றச்சாட்டுகளுக்காகப் புதன்கிழமை (நவம்பர் 4) புதிய அபராதங்களை அறிவித்துள்ளது.

அனைத்துலக குறியீட்டு வழங்குநரான எம்எஸ்சிஐ அண்மையில் விடுத்த உத்தேச தரமிறக்கல் எச்சரிக்கையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் சந்தை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக அது அமைந்துள்ளது.

சுற்றுலா நிறுவனமான பிடி பனோரமா சென்ட்ரவிசாதா டிபிகே, கார் விற்பனை நிறுவனமான பிடி பிந்தாங் ஓட்டோ குளோபல் ஆகிய இரு நிறுவனங்கள் தொடர்பான விதிமீறல் குற்றச்சாட்டுகளுக்காகப் பல்வேறு அமைப்புகள்மீது மொத்தம் 7.54 பில்லியன் ரூப்பியா (சிங்கப்பூர் $532,113) மதிப்பிலான அபராதங்களை ஒழுங்குமுறை ஆணையம் விதித்தது.

பனோரமாவின் பங்குகள் வர்த்தகத்தில் சந்தை மாற்றங்கள் நடந்திருப்பதை ஒழுங்குமுறை ஆணையம் கண்டறிந்தது. அது பங்குகளில் தவறான நகர்வுகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த விவகாரத்தில் 18 பங்கு வர்த்தகக் கணக்குகள் முடக்கப்பட்டன.

2017ஆம் ஆண்டுமுதல் 2020ஆம் ஆண்டுவரையிலான நிதியறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்த ஆரம்பப் பொது வெளியீட்டு வருவாய் தொடர்பான தவறான தகவல்களுக்கு ஒப்புதல் அளித்ததாகக் கூறி, பிந்தாங் ஓட்டோவின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம் அபராதம் விதித்தது.

முதலீட்டாளர்கள் சமர்ப்பித்த பங்குகளைத் திரும்பப் பெறும் கோரிக்கைகளுக்குப் பணம் செலுத்தத் தவறியது உள்ளிட்ட விதிமீறல் குற்றச்சாட்டுகளுக்காக இம்மாதம் 2ஆம் தேதி முதலீட்டு மேலாண்மை நிறுவனமான பிரி அரோரா அசெட் மேனேஜ்மென்ட்மீது 2.6 பில்லியன் ருபியா அபராதம் விதிக்கப்பட்டதுடன் அதன் ஐந்து பரஸ்பர நிதி திட்டங்களும் மூடப்பட்டன.

குறிப்புச் சொற்கள்