புதுடெல்லி: இந்தியாவில் செயல்படும் ரயில் வண்டிகளில் அசம்பாவிதங்களையும் விபத்துகளையும் தவிர்க்கும் நோக்கத்துடன், பாதுகாப்பு நடவடிக்கையாக இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையில் பயணிகள் கைப்பேசிகளுக்கு மின்னூட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரங்களை இந்திய ரயில்வேதுறை திங்கட்கிழமை (அக்டோபர் 26) அறிக்கையாக வெளியிட்டது. அண்மையில் தென்கிழக்கு வட்டார ரயில் சேவையில் பயணி ஒருவர் நள்ளிரவு நேரத்தில் அவரது கைப்பேசிக்கு மின்னூட்டியபோது அது திடீர் என வெடித்தது. அச்சம்பவத்துக்குப் பிறகு ரயில்வே துறையின் இந்தத் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதேபோன்ற தடை உத்தரவு முதன்முதலில் கடந்த 2014 ஜூன் மாதம் விதிக்கப்பட்டது. அப்போது பெங்களூரு எக்ஸ்பிரஸ் வண்டியில் ஏசி3 பிரிவில் தீ விபத்து நிகழ்ந்ததன் விளைவாக ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் பரிந்துரையின்படி தொலைபேசி மின்னூட்டுக்குத் தடை செய்யப்பட்டது .
பிறகு 2023 நவம்பர் மாதம் டில்லி-தர்பங்கா சிறப்பு ரயிலில் உறங்கிக்கொண்டு பயணம் செய்யக்கூடிய ‘ஸ்லீப்பர்’ பிரிவில் தீ விபத்து ஏற்பட்டு மற்ற வண்டிகளுக்கும் பரவிய சம்பவத்துக்குப் பிறகு, ரயிலில் கைப்பேசிக்கு மின்னூட்டம் செய்வது கவனம் பெற்றது.
இதற்கிடையே குளிரூட்டி வசதி இல்லா வண்டிகளில் அதிகாரிகளைப் பணியமர்த்தி அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது நடைமுறைக்கு ஒவ்வாது என்று ஆணையம் தெரிவித்தது. அதற்கான செலவு கட்டுபடியாகாது என்று அது காரணம் கூறியுள்ளது.
தென்கிழக்கு மத்திய ரயில்வே நிர்வாகம் அதன் அனைத்து பிரிவுகளிலும் நடப்பில் உள்ள குளிரூட்டி வசதியுள்ள ஸ்லீப்பர் பிரிவுகளில் மின்னூட்டு வசதி இயங்காத நேரம் குறித்த விதிமுறைகள் உள்ளடங்கிய நினைவூட்டும் வில்லைகளை, பயணிகள் தெளிவாகப் பார்க்கும் விதமாக ஒட்டும்படி வழிகாட்டியுள்ளது.
