பேங்காக்: பள்ளிகளுக்கு அருகே மின்சிகரெட்டுகளின் விற்பனையையும் பயன்பாட்டையும் முழுமையாக ஒழிக்க, பேங்காக் நகர அதிகாரிகள் புதிதாகக் கடுமையான ஒரு திட்டத்தை அறிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் 100 விழுக்காடு புகையற்றதாக இருக்க வேண்டும் என்பதே திட்டத்தின் இலக்கு.
குறிப்பாக, இணையத்தளங்கள் மூலம் மின்சிகரெட்டுகள் மிக எளிதில் பிள்ளைகளுக்குக் கிடைக்கத் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த கவலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தப் புதிய திட்டம் அறிமுகம் காண்கிறது.
நாட்டின் தலைநகரில் போதைப்பொருள் தொடர்பான விவகாரங்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த முயற்சிகளில் கவனம் செலுத்தப்படுவதாக பேங்காக் துணை ஆளுநர் இணைப் பேராசிரியர் தவிடா கமோல்வேஜ் தெரிவித்தார்.
இளையர்களிடையே மின்சிகரெட்டின் பயன்பாடு அதிர்ச்சி தரும் அளவில் அதிகரித்து வருவது குறித்து கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது. மேலும் மோசமான போதைப்பொருள் புழக்கத்திற்கு மின்சிகரெட் பயன்பாடு இட்டுச்செல்லலாம் என்று அதிகாரிகள் பலர் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில், சுற்றுக்காவலில் காவல்துறையினருடன் ஈடுபடவுள்ள ‘தேசாகிஜ்’ நகரக் காவலர்கள், பள்ளிச் சிறார்களிடம் மின்சிகரெட்டுகளும் வேறு வகை போதைப்பொருளும் சட்டவிரோதமாக விற்கப்படுவதைத் தடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
முதலில், பள்ளி வளாகங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இத்தகைய விற்பனை முயற்சிகள் முடக்கப்பட்ட பிறகு, நகரெங்கும் புதிய சட்டத்தைக் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.