ராஜ்ஷாஹி: பங்ளாதேஷ், இந்தியாவுடன் கங்கை நீரைப் பகிரும் 30 ஆண்டுக்கான ஒப்பந்தம் இவ்வாண்டு டிசம்பரில் காலாவதி ஆகவுள்ளது.
அதனைப் புதுப்பிக்கத் தவறினால் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் பங்ளாதேஷ் உள்ளது.
உலகில் மிக அதிக அளவில் நதியை நம்பி வாழும் மக்கள் கங்கையின் கரைகளிலேயே வாழ்கின்றனர். இந்தியாவில் உருவெடுக்கும் கங்கை நதி 2,525 கிலோ மீட்டர் தூரம் சென்று கடலில் சேருகிறது.
உலக வங்கியின் தரவுகளின்படி, அதன் கரைகளில் 655 மில்லியன் மக்கள் குடியிருக்கின்றனர். அவர்களில் 50 மில்லியன் மக்கள் பங்ளாதேசைச் சேர்ந்தவர்கள்.
டிசம்பர் 12ஆம் தேதி முடிவடையும் ஒப்பந்தம் 1996ஆம் ஆண்டில் இருநாடுகளுக்கும் இடையே செய்யப்பட்டது. அதன்படி இந்தியாவின் ஃபாராக்கா அணைக்கட்டில் தேங்கும் நீரை வறட்சிக் காலங்களில் பகிர்வதும் அடங்கும். அப்பகுதி பங்ளாதேஷிலிருந்து மேல்நோக்கி 20 கிலோமீட்டர் தூரத்தில் இந்தியாவில் உள்ளது.
ஆனால் இருதரப்பும் பயனடையும் வகையில் புதிய ஒப்பந்தம் மதிப்புடனும் மரியாதையுடனும் செய்யப்படவேண்டும் என்று பங்ளாதேஷ் பிரதமருக்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ராஷெட் அல் மாமுட் டிடுமிர் ஊடகத்திடம் கூறினார். அவர் நீர் பகிர்வுக்கான தொழில்நுட்பக் குழுவின் தலைவர் ஆவார்.
இருநாடுகளுக்கும் இடையே உள்ள 54 எல்லை சார்ந்த ஆறுகள் குறித்து கருத்துவேறுபாடுகள் பல ஆண்டுகளாக நிலவிவருகின்றன, அவற்றில் கங்கை நதியே மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
நீர் பகிர்வை மேற்பார்வையிடும் பங்ளாதேஷின் நதிநீர் இணை ஆணையத்தின் (ஜெஆர்சி) முன்னாள் உறுப்பினர் மாலிக் ஃபிடா ஏ கான், இந்தியா கூடுதலாகப் பல அணைகளை அதன் பகுதிகளில் கட்டியுள்ளதாகக் கூறினார்.
புதிய ஒப்பந்தத்தில் ஆற்றுப் படுகையின் முழு அளவும் கருத்தில்கொள்ளப்பட்டு, பருவநிலை மாற்றம்மீதான கவனமும் செலுத்தப்படவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே புதிய ஒப்பந்தம் குறித்து இந்தியா எவ்வித பதிலையும் வழங்கவில்லை என்று பங்ளாதேஷ் தெரிவித்துள்ளது.
நீர் பகிர்வு குறித்த விவரங்களை, அதன் நதிகளுக்கான இணை ஆணையம் ஆய்வு செய்து முடிவெடுக்கும் என்று புதுடெல்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. ஆணையம் கடந்த மே மாதம் தொழில்நுட்ப விவாதங்களை நடத்தியது எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
அதிகாரபூர்வ தரவுகளின்படி, 2022ல் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நதிநீர் இணை ஆணையம் அதன் சந்திப்புக் கூட்டத்தை நடத்தியது என்று தெரிகிறது.
