‘ஏஐ’ ஒத்துழைப்பில் அமெரிக்கா - சீனா தெளிவாக இருக்கவேண்டும்: பெஸ்ஸன்ட்

‘ஏஐ’ ஒத்துழைப்பில் அமெரிக்கா - சீனா தெளிவாக இருக்கவேண்டும்: பெஸ்ஸன்ட்

படம்: ராய்ட்டர்ஸ்

11 Nov 2026 - 8:29 pm

2 mins read

நியூயார்க்: செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஆதிக்கம் செலுத்த போட்டியிடும் அமெரிக்காவும் சீனாவும் அத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் தெளிவாக இருக்கவேண்டும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸ்ஸன்ட் கூறியுள்ளார்.

சீனாவுக்கும் சமநிலையான ஆக்கபூர்வ உறவை உருவாக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

சீன அதிபர் ஸி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சீனாவில் அடுத்த வாரம் சந்திக்கவிருக்கிறார். இருநாட்டுத் தலைவர்களும் இவ்வாண்டு சந்தித்துக்கொள்வது அது மூன்றாவது முறையாக இருக்கும்.

அதற்குமுன், நியூயார்க்கில் உள்ள அமெரிக்க-சீன உறவுகளுக்கான தேசியக் குழுவிடம் திரு பெஸ்ஸன்ட் கருத்துரைத்தார்.

இம்மாதம் 18, 19ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் ஆசிய-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்புத் தலைவர்கள் மாநாட்டுக்கு இடையே திரு டிரம்ப்பும் திரு ஸியும் சந்திக்கவிருக்கின்றனர்.

அந்தச் சந்திப்பு பொதுவான அபாயங்களுக்கு எதிரான பாதுகாப்பை வலுப்படுத்தவும் இரு கட்டமைப்புகளுக்கும் இடையிலான தவறான புரிதல்களைத் தவிர்க்கவும் உதவும் என்றார் திரு பெஸ்ஸன்ட்.

அதிநவீன மாதிரிகள் வெளியிடப்படுவதற்குமுன் அவற்றை மதிப்பீடு செய்து சோதிப்பதற்கான சிறந்த நடைமுறைகளையும் இருநாடுகள் ஒன்றோடு ஒன்று பகிர்ந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பம் சார்ந்த அபாயகரமான சம்பவங்களின்போது இருதரப்பும் ஒன்று மற்றொன்றிடம் தகவலைப் பரிமாறிக்கொள்வதற்கான நேரடி வழிமுறை குறித்து ஆராய அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக்கொண்டதைத் திரு பெஸ்ஸன்ட் சுட்டினார்.

செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின்போது புதிய செயற்கை நுண்ணறிவு எச்சரிக்கைக் கட்டமைப்பை உருவாக்குவது குறித்து திரு டிரம்ப்பும் திரு ஸியும் இணக்கம் கண்டனர்.

செயற்கை நுண்ணறிவு அதிநவீனமாகும்போது அதனால் ஏற்படக்கூடிய அபாயங்களைச் சமாளிப்பதற்கான தேவையும் அதிகரிக்கிறது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காசீனாசெயற்கை நுண்ணறிவுஒத்துழைப்புபோட்டித்தன்மை