வாஷிங்டன்: அமெரிக்காவை திரு டோனல்ட் டிரம்ப்பிடமிருந்து மீட்ட அதிபர் எனப் பெயர் எடுப்பது திரு ஜோ பைடனின் இலக்காக இருந்தது.
ஆனால், மீண்டும் அதிபர் பதவியை திரு டிரம்ப்பிடமே தரும் அதிபர் என்ற பெயரே அவருக்கு மிஞ்சியிருப்பதாகச் சொல்லப்படுகிறது என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் கூறுகின்றன.
அதேநேரம், வரும் ஆண்டுகளில் 82 வயது பைடன் நல்ல வகையில் விமர்சிக்கப்படக்கூடும் என்றும் அவை குறிப்பிட்டுள்ளன.
திரு பைடனின் ஆட்சி தொடங்கி சிறிது காலத்தில் 2021ஆம் ஆண்டில் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனது படைகளை மீட்டுக்கொள்ள முடிவு செய்தது. சர்ச்சைக்குரிய அந்நடவடிக்கை திரு பைடனின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தியது.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தைக் கையாள அவரது ஆட்சியில் வரையப்பட்ட ஆதரவுத் திட்டத்தால் பணவீக்கம் மோசமடைந்தது. சென்ற ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அவரின் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துப் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்ததற்கு அது ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அவருடைய மென்மையான குடிநுழைவுக் கொள்கைகள் காரணமாக வரலாறு காணாத அளவில் சட்டவிரோதக் குடியேறிகள் அமெரிக்காவுக்குள் நுழைந்தனர்.
அவரது தவணைக் காலம் நிறைவடையவிருக்கும் வேளையில் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இணக்கம் காணப்பட்டது. அதேவேளை, அப்போரில் மரண எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருந்தபோதும் அவர் இஸ்ரேலுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்ததன் காரணமாகப் பலரிடையே கோபம் எழுந்தது.
இறுதியில் சீரான முறையில் அதிபர் பொறுப்பை திரு டிரம்ப்பிடம் ஒப்படைக்கத் தேவையான நடவடிக்கைகளை திரு பைடன் மேற்கொண்டார். தமது பதவிக்கால நிறைவு உரையில் ‘குறிப்பிட்ட சிலரின் கட்டுப்பாட்டுக்குள் வரும் அபாயகரமான போக்கு அமெரிக்காவில் உருவாகிறது’ என்று திரு டிரம்ப்பைக் குறிவைத்துத் தாக்கியும் பேசினார்.
திரு பைடனின் அதிபர் தவணைக் காலம், அவரின் 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் ஏமாற்றம் தரும் முடிவாக சிலர் பார்ப்பதாகக் கூறப்படுகிறது. அதையும் அவர் நல்ல வகையில் எடுத்துக்கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
“அமெரிக்காவில் மட்டும்தான் எதுவும் சாத்தியம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. சாதாரண பின்னணியிலிருந்து வந்த திக்கிப் பேசும் சிறுவன் அதிபராக உயர்ந்தது அதற்கான எடுத்துக்காட்டு,” என்று திரு பைடன் தம்மை உதாரணமாக எடுத்துச் சொன்னார்.