அசடாபாத்/ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள பள்ளி அருகில் சனிக்கிழமை (நவம்பர் 28) உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் தவறுதலாக குண்டு வெடித்ததில் 10 மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் 110 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்று ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சின் பேச்சாளர் அப்துல் மடீன் கனி கூறினார்.
குனார் மாநிலத்தின் தலைநகர் அசடாபாத்தில் உள்ள ஒரு சுரங்க நிறுவனத்துக்குச் சொந்தமான வெடிகுண்டுக் கிடங்கில் அந்த விபத்து நடந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அதே விசாரணையில், அந்த வெடிப்பு அலட்சியத்தாலும் கவனக்குறைவாலும் நிகழ்ந்தது என்று அரசாங்கத் துணைப் பேச்சாளர் ஹம்துல்லா ஃபிட்ராட் தெரிவித்தார்.
குனார் மாநிலத்தின் தகவல் கலாசாரத் துறையின் தலைவர் சமி உல் ஹக் ஹக் பயான், ஷகாய் நடுநிலைப் பள்ளி அருகில் அவ்விபத்து நடந்ததாகவும் சுரங்கப் பணிகளின் ஓர் அங்கமாக பாறைகளை உடைக்க வெடிகுண்டுகளைத் தயாரித்தபோது அவை தவறுதலாக வெடித்ததாக விளக்கினார்.
அசடபாத்தில் உள்ள மருத்தவமனைக்கு ஏழு சடலங்கள் வந்தடைந்தன என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். அங்கு காயமடைந்த எட்டு வயது முதல் 15 வயதுக்குட்பட்ட பல சிறுவர்கள் மருத்துவமனைப் படுக்கைகளில் படுத்திருந்ததை ஏஎஃப்பி ஊடகத்தினர் கண்டுள்ளனர்.
வெடிப்பில் மரணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
