பிரிட்டன்: பிரிட்டனில் ஏற்கெனவே தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பராமரிப்பு ஊழியர்கள், நிரந்தரவாசத் தகுதியைப் பெற 15 ஆண்டுகள்வரை காத்திருக்கும்படி கூறும் கொள்கையை அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஷபானா மாமுட் ரத்து செய்துள்ளார்.
அத்தகைய ஊழியர்கள், பிரிட்டனில் காலவரம்பின்றி நிரந்தரமாக வாழவும் வேலை செய்யவும் அனுமதிப்பதற்கான காத்திருப்புக் காலத்தை ஐந்திலிருந்து பத்தாண்டுகள்வரை அதிகரிக்கப்போவதாகத் திருவாட்டி மாமுட் இதற்குமுன் கூறியிருந்தார். ஒருசில ஊழியர்கள் 15 ஆண்டுகள்வரை காத்திருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
ஆனால், தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து திருவாட்டி மாமுட் அந்தக் கொள்கையில் மாற்றங்கள் செய்தார்.
ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 25,000 பவுண்ட் சம்பாதிக்கும் பராமரிப்பு ஊழியர்களும் கடந்த ஆண்டு மே மாதத்துக்குமுன் பிரிட்டனுக்கு வந்த பராமரிப்பு ஊழியர்களும் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நிரந்தரவாசியாவதற்குத் தகுதிபெறுவர்.
எனினும், பிரிட்டனின் பழைமைவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருவாட்டி மாமுட்டின் கொள்கை மாற்றத்தால் நாட்டு மக்கள் பில்லியன்கணக்கான பவுண்ட் செலவு செய்யவேண்டியிருக்கும் என்று குறைகூறினர்.
கால வரம்பின்றி நிரந்தரமாக வாழவும் வேலை செய்யவும் படிக்கவும் வெளிநாட்டினரை அனுமதிக்கும் கொள்கையின்கீழ் உள்ளோர் பிரிட்டன் குடியுரிமையைப் பெறுவதற்கும் தகுதிபெறுகின்றனர்.
தமது கொள்கையை ரத்துசெய்ததன் மூலம் ஏற்படும் செலவினங்கள் குறித்துத் திருவாட்டி மாமுட் விவரிக்கவில்லை.
மார்ச் மாதத்தில் அவர் தமது திட்டங்களை முன்வைத்தபோது புலம்பெயர்தல் தொடர்பாக அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் தரவுகளின் அடிப்படையில் தற்போதைய விதிகளால் 4.2 பில்லியன் பவுண்ட் செலவாகும் என்று உள்துறை அமைச்சு மதிப்பிட்டது.
அது, இவ்வாண்டிலிருந்து 2030ஆம் ஆண்டுவரை பிரிட்டனில் குடியேறவிருப்பதாக எதிர்பார்க்கப்படும் 117,000 வெளிநாட்டுப் பராமரிப்புப் பணியாளர்களின் வாழ்நாள் செலவுக்கான மதிப்பீடு.
கடந்த ஆண்டு திருவாட்டி மாமுட் அறிவித்த திட்டம், 799,000 பேர் நிரந்தரக் குடியுரிமை பெறுவதைத் தாமதப்படுத்தியிருக்கும்.
திங்கட்கிழமை (நவம்பர் 2) அறிவிக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின்படி, அந்த எண்ணிக்கை 517,000ஆகக் குறைகிறது.
