உக்ரேனுக்கு ராணுவ ஆதரவை வலுப்படுத்த பிரிட்டன், பிரான்ஸ் உறுதி

உக்ரேனுக்கு ராணுவ ஆதரவை வலுப்படுத்த பிரிட்டன், பிரான்ஸ் உறுதி

2 mins read
6b4e37bf-e8e7-4ad7-96c3-a0a23b3dabcf
உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியும் (இடது) பிரிட்டிஷ் பிரதமர் ஆன்டி பர்ன்ஹாமும் (வலது) உக்ரேனின் கிவ் நகரில் உள்ள அதிபர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது கைகுலுக்குகின்றனர். - படம்: இபிஏ
Google News Preferred Icon

கிவ்: உக்ரேனின் 35வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் கிவ் நகரில் நடைபெற்ற நட்பு நாடுகளின் மாநாட்டில், உக்ரேனுக்கு அதிநவீனத் தொழில்நுட்பங்கள், வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உட்பட மேலும் வலுவான ராணுவ ஆதரவை வழங்க பிரிட்டனும் பிரான்சும் உறுதிபூண்டுள்ளன.

பதவியேற்ற பிறகு முதன்முறையாக உக்ரேனுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்ட பிரிட்டிஷ் பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம், ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களிலிருந்து உக்ரேனைத் தற்காக்க அனைத்து வகையிலும் உதவ வேண்டும் என்று கூட்டணி நாடுகளிடம் கேட்டுக்கொண்டார்.

மண்ணில் இருந்து விண்ணுக்குப் பாயும் ஏவுகணைகளை உக்ரேனே தயாரிப்பதற்குத் தேவையான ரகசியத் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்ள பிரிட்டன் அனுமதி அளித்துள்ளது. அதற்குப் பிரான்சும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரிட்டனின் இந்த நடவடிக்கை இரு நாடுகளின் உறவில் “எரியும் தீயில் நெய் ஊற்றுவது போல்” அமையும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரித்துள்ள சூழலில், வரவிருக்கும் குளிர்காலத்தைச் சமாளிக்க உக்ரேனுக்குக் குறைந்தபட்சம் 300 ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் தேவைப்படுவதாக உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மெக்ரோன், உக்ரேனுக்கான ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளின் விநியோகத்தை விரைவுபடுத்த உறுதியளித்தார்.

2026ஆம் ஆண்டில் உக்ரேனின் தற்காப்பு வரவுசெலவுத் திட்டத்தில் நிலவும் 2,700 கோடி அமெரிக்க டாலர் பற்றாக்குறையை ஈடுகட்ட மேலைநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ரஷ்யச் சொத்துகளைப் பயன்படுத்தலாம் என ஸெலென்ஸ்கி யோசனை தெரிவித்தார்.

அதேவேளையில், நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் கூடி 50க்கும் மேற்பட்ட நாடுகள், உக்ரேனின் எல்லைப் பாதுகாப்பிற்கு ஆதரவு தெரிவித்து ரஷ்யா உடனடியாக நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு வர வேண்டும் என கூட்டு அறிக்கை வெளியிட்டன.

கிவ் நகரில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டங்களின்போது உக்ரேனின் புதிய ஆளில்லா வானூர்தி தொழில்நுட்பங்களின் செய்முறை விளக்கங்கள் இடம்பெற்றன.

குறிப்புச் சொற்கள்