தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிக்டாக், ரெடிட் மீது பிரிட்டன் விசாரணை

1 mins read
d7adf467-1d2f-4a90-b4e7-55b348560ed4
13 வயது முதல் 17 வயது வரையிலானோரின் தனிப்பட்ட தகவல்களை டிக்டாக் எவ்வாறு பயன்படுத்தி அவர்களுக்கான உள்ளடக்கத்தைக் காட்டுகிறது என்பது குறித்து விசாரணை துவங்கப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: சிறுவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க டிக்டாக், ரெடிட் தளங்கள் மீதும் படங்களைப் பகிரும் இணையத்தளமான ‘இமஜர்’ மீதும் பிரிட்டனின் தகவல் ஆணையர் அலுவலகம் மார்ச் 3ஆம் தேதி விசாரணை மேற்கொண்டுள்ளது.

சிக்கல்மிகுந்த படிமுறைகளைப் பயன்படுத்தும் சமூக ஊடக நிறுவனங்கள், தங்களின் பயனாளர்களைத் தொடர்ந்து தக்கவைத்திட, உள்ளடக்கத்திற்கு முன்னுரிமை வழங்குவது வழக்கம். இருப்பினும், தீங்கிழைக்கக்கூடிய உள்ளடக்கத்தை அதிகப்படியாகக் காட்டுவதால் அவற்றின் மூலம் சிறார்கள் தவறான பாதைக்கு ஈர்க்கப்படலாம்.

இந்நிலையில், 13 வயது முதல் 17 வயது வரையிலான பிரிவினரின் தனிப்பட்ட தகவல்களை டிக்டாக் எவ்வாறு பயன்படுத்தி அவர்களுக்கான உள்ளடக்கத்தைக் காட்டுகிறது என்பது குறித்து விசாரணை துவங்கப்பட்டுள்ளது.

தளத்தைப் பயன்படுத்தும் இளவயது பயனர்களின் வயது எவ்வாறு மதிப்பிடப்படுகிறது என்பது குறித்து ரெடிட் தளமும் ‘இமஜர்’ இணையத்தளமும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

“இந்த நிறுவனங்கள் சட்டத்தை மீறியுள்ளன என்பதற்குப் போதுமான ஆதாரம் கிடைத்தால், அவர்களுக்கு இதனைத் தெரியப்படுத்தி, தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தகவல் ஆணையம் அலுவலகத்தின் அறிக்கை குறிப்பிட்டது.

பிரிட்டன் 2024ஆம் ஆண்டில் பரிந்துரைத்த நடவடிக்கைகளின்படி, சிறுவர்களைப் பாதுகாக்க சமூக ஊடகத் தளங்கள் தங்களின் படிமுறைகளைத் தகுந்த வழியில் அமைத்திட வேண்டும் என்றும் தீங்கிழைக்கக்கூடிய உள்ளடக்கத்தை அகற்ற அல்லது குறைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்