தரவுக்கசிவை மறைக்க $4.1 மில்லியன் செலவு செய்த பிரிட்டன்

தரவுக்கசிவை மறைக்க $4.1 மில்லியன் செலவு செய்த பிரிட்டன்

2 mins read
07080483-e4d2-4a9c-ba9b-c005a7538b3e
தரவுக்கசிவு குறித்தும் அதுபற்றிய செய்தியைக் கூறக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு குறித்தும் செய்தி வெளியிட நிருபர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. - படம்: இபிஏ

லண்டன்: பிரிட்டி‌ஷ் அரசாங்கம் தரவுக்கசிவு தொடர்பான செய்தியை மூடி மறைக்கும் ரகசிய சட்ட உத்தரவுக்கு $3.2 மில்லியன் டாலரைச் ($4.1 மில்லியன்) செலவு செய்துள்ளது.

ஏறக்குறைய 19,000 ஆஃப்கானியர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆபத்து விளைவிக்கக்கூடிய அந்தத் தரவுக்கசிவு பற்றி நிருபர்கள் செய்தி வெளியிடுவதை அந்த உத்தரவு தடை செய்வதாக ‘த நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு குறிப்பிட்டது.

2022ஆம் ஆண்டு நிகழ்ந்த தரவுக்கசிவால் பிரிட்டி‌ஷ் படைகளில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஆஃப்கானியர்களின் தனிப்பட்ட தகவல்கள் வெளியாயின. அவர்கள் 2021ஆம் ஆண்டு தலிபான் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன் பிரிட்டி‌ஷ் படையில் பணியாற்றியவர்கள்.

கன்சர்வேட்டிவ் கட்சியால் வழிநடத்தப்பட்ட அப்போதைய அரசாங்கம் இங்கிலாந்தின் உயர் நீதிமன்றத்திற்குச் சென்று தரவுக்கசிவு குறித்த செய்தியை வெளியிடுவதற்கான தடையைப் பெற்றது.

நீதிமன்ற உத்தரவு குறித்தும் செய்தி வெளியிட நிருபர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் சட்டபூர்வ நடவடிக்கை 2023 ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. செய்தியாளர்கள் தரவுக்கசிவு குறித்து தற்காப்பு அமைச்சிடம் அப்போது கேள்வி எழுப்பினர். இருப்பினும் அந்த தடை உத்தரவு ஜூலை வரை நீடித்தது. அந்தத் தடைக்குப் பிரிட்டி‌ஷ் அரசாங்கம் $3.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையைச் செலவு செய்ததாகக் கூறப்படுகிறது.

தீர்மானத்தை நிறைவேற்றுவதில் ஈடுபட்ட அரசாங்க அமைச்சர்கள் கடுமையான தடை உத்தரவைத் தற்காத்துப் பேசினர். தரவுக்கசிவால் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்க அத்தகைய நடவடிக்கை தேவை என்று அவர்கள் வாதாடினர்.

தரவுக்கசிவால் பிரிட்டனுக்கு ஏறக்குறைய 4,500 ஆப்கானியர்களைக் கொண்டுவருவதற்கான ரகசியத் திட்டத்திற்குப் பிரிட்டன் குறைந்தது 400 மில்லியன் பவுண்டைச் செலவு செய்தது.

அரசாங்கத்தின் அந்தச் செயல் நாட்டின் ஊடகச் சுதந்திரம் பற்றி கேள்வி எழுப்பியுள்ளது.

பேச்சு சுதந்திரத்தை மதிப்பதாகக் கூறிய பிரிட்டி‌ஷ் அரசாங்கம், வன்முறை, வெறுப்புணர்வால் தூண்டப்படும் குற்றங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க சில தீரிமானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்றது.

குறிப்புச் சொற்கள்