லண்டன்: ஒவ்வொரு ஆண்டும் கள்ளத்தனமாகப் பல்லாயிரக்கணக்கான மக்களை பிரிட்டனுக்குள் கடத்தி வரும் கும்பல்களை ஒடுக்கும் விதமாக புதிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
பிரான்சிலிருந்து கள்ளத்தனமாக சிறுசிறு படகுகளில் பிரிட்டனுக்குள் அதிகமானவர்கள் வருகிறார்கள். இது பிரிட்டனில் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இவற்றைத் தடுக்கும் நோக்கில் பிரிட்டிஷ் அரசாங்கம், கள்ளக் குடியேற்றத்திற்கு உதவும் சட்டவிரோத கும்பல்களுக்கு எதிராக புதிய சட்டத்தை வரையவுள்ளது.
புதிய சட்டங்கள், சட்டவிரோத கும்பல்களின் நடவடிக்கையை ஒடுக்கும் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் வெட் கூப்பர் தெரிவித்தார்.
வெளியுறவு அமைச்சும் உள்துறை அமைச்சும் இணைந்து சட்டத்தை வரையும் என்று கூறப்படுகிறது. 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை முடக்குவது, வர்த்தகங்களைத் தடை செய்வது, கடுமையான சிறைத் தண்டனை உள்ளிட்டவை அந்தச் சட்டத்தில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
2024ஆம் ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 37,000 பேர் கள்ளத்தனமாகப் படகுகள் வழி பிரிட்டனுக்குள் நுழைந்தனர்.
வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆகிய நாடுகளிலிருந்து மக்கள் பிரிட்டனுக்குள் கள்ளத்தனமாக நுழைகின்றனர். அதற்காக அவர்கள் பல்லாயிரக் கணக்கான டாலரைக் குற்றக் கும்பல்களிடம் தருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
குற்றக் கும்பல்கள் அவர்கள் ஒரு சிறு படகுக்குள் அடைத்து பிரிட்டனுக்குள் கடத்தி வருகின்றனர். பலர் அவர்களது பயணங்களின்போதே இறக்கின்றனர்.

