நேட்டோ வட்டாரத்தில் பிரிட்டி‌‌ஷ், பிரெஞ்சுப் படையினர் கூட்டுப் பயிற்சி

நேட்டோ வட்டாரத்தில் பிரிட்டி‌‌ஷ், பிரெஞ்சுப் படையினர் கூட்டுப் பயிற்சி

படம்: ஏஎஃப்பி

25 Oct 2026 - 12:47 pm

2 mins read

பிரிட்டி‌‌ஷ், பிரெஞ்சுப் படையினர் ஜெர்மனியில் பேரளவிலான கூட்டுப் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

நேட்டோ உறுப்பு நாடுகளின் நிலப்பரப்பு தாக்கப்படும் சூழலில், அதனை எவ்வாறு தற்காப்பது என்பதை விளக்கும் வகையில் கூட்டுப் பயிற்சி அமைந்தது.

அதில் கடந்த இருபது ஆண்டுகளில் பிரிட்டன் மேற்கொண்ட மிகப் பெரிய வான்வழிப் படை நடவடிக்கைகளில் ஒன்றும் அடங்கும் என்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) பிரிட்டன் அரசாங்கம் தெரிவித்தது.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பாவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கூட்டுப் பயிற்சி இடம்பெற்றுள்ளது.

‘ரைனோ டைட்டன்’ என்று பெயரிடப்பட்ட இந்த ஏழு வாரப் பயிற்சியில் கிட்டத்தட்ட 2,500 படையினர் கலந்துகொண்டனர்.

இதில் 600 பிரிட்டி‌‌ஷ், பிரெஞ்சுத் துணை ராணுவ வீரர்கள், அரச ஆகாயப்படையின் நான்கு ‘ஏ400எம்’ அட்லஸ் போக்குவரத்து விமானங்கள் மூலம் ஜெர்மனியின் வான்பரப்பிலிருந்து குதித்தனர்.

ஜெர்மனியின் ஸென்னலாகார் ராணுவப் பயிற்சி நிலையத்தில் கூட்டுப் பயிற்சி நடைபெற்றது.

“21ஆம் நூற்றாண்டில் நாம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்குப் போர்க்கலையில் நவீன, புதுப்பிக்கப்பட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. அதற்கேற்ப எங்களின் ஆயுதப்படைகள் தங்களைத் தயார்படுத்தி வருகின்றன,” என்று பிரிட்டி‌‌ஷ் தற்காப்பு அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் அறிக்கையொன்றில் தெரிவித்தார்.

“எங்களின் பிரெஞ்சு, ஜெர்மானியக் கூட்டாளிகளுடன் இணைந்து நடத்தப்படும் இந்த விரிவான பயிற்சி, நேட்டோ வட்டாரத்தைப் பாதுகாக்கத் தேவையான எந்த இடத்திற்கும் விரைவான, பெரிய அளவிலான வான்வழிப் படையைக் கொண்டுசேர்க்க முடியும் என்பதை நிரூபிக்கிறது.

“எதிரிகளைத் தடுத்து நிறுத்தவும் பிரிட்டனையும் நமது கூட்டாளிகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் படையினர் மற்றும் சிறப்புக் கருவிகளின் ஒருங்கிணைப்பு அவசியமானது,” என்றும் பிரிட்டி‌‌ஷ் தற்காபு அமைச்சர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்