சியாமென்: சீனாவின் கிராமப் பகுதி ஒன்றில் புத்தர் வடிவில் அடுத்த அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருக்கும் டோனல்ட் டிரம்பின் உருவச் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அமைதியான வடிவில் புத்தர் தியானத்தில் இருப்பதைப் போல் திரு டிரம்ப்பின் உருவச் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. திரு டிரம்ப், புத்தரைப் போன்ற உடையையும் ‘அணிந்திருக்கிறார்’.
‘பெளத்த டிரம்ப்’ சிலைகளை ஃபூஜியான் மாநிலத்தில் உள்ள சியாமென் நகரில் ஹோங் ஜின்ஷி எனும் சிற்பி வடிவமைக்கிறார். ஹோங் விற்கும் ஒவ்வொரு டிரம்ப் சிலையின் விலை 999 யுவானிலிருந்து 20,000 யுவானுக்கு (190 - 3,750 வெள்ளி) இடைப்பட்டிருக்கும். சிலை எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதைப் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது.
ஸென் (Zen) சித்தாந்தத்தை மையமாகக் கொண்டதுபோல் தோன்றும் இச்சிலைகள் முதன்முதலில் 2021ஆம் ஆண்டு டாவ்பாவ் (Taobao) மின்வர்த்தகத் தளத்தில் பிரபலமடைந்தன. இவை தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தின. இப்போது திரு டிரம்ப் மறுபடியும் அமெரிக்க அதிபராகவிருப்பதை முன்னிட்டு சிலைகள் மீண்டும் பிரபலமாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அரசியல்வாதிகள் பொதுவாக விறுவிறுப்பை ஏற்படுத்தாதவர்களாக இருப்பர். ஆனால், டிரம்ப்போ இணையத்தில் பிரபலமாக இருந்துவரும் பல சுவாரஸ்யமான அம்சங்கள் பற்றிப் பேசுபவர்,” என்று ஹோங் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.