பள்ளிகளில் துன்புறுத்தல்: பரிந்துரைகளைக் கல்வி அமைச்சு இரண்டாம் காலாண்டில் வெளியிடும்

பள்ளிகளில் துன்புறுத்தல்: பரிந்துரைகளைக் கல்வி அமைச்சு இரண்டாம் காலாண்டில் வெளியிடும்

2 mins read
ebb2ae67-4ea7-41bd-932b-f398bea6aa50
ஊடகங்களுக்கு ஜனவரி 26ஆம் தேதி அளித்த நேர்காணலில் பள்ளிகளில் துன்புறுத்தல் குறித்த தமது அமைச்சின் மறுஆய்வு பற்றிக் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பள்ளிகளில் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து மேற்கொண்ட மறுஆய்வில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளைக் கல்வி அமைச்சு, இரண்டாம் காலாண்டில் வெளியிடத் தயாராகி வருகிறது.

பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர், பொதுமக்கள் என 2,000க்கும் மேற்பட்டோரிடம் அது கருத்து திரட்டியது.

ஊடகங்களுக்கு ஜனவரி 26ஆம் தேதி அளித்த நேர்காணலில் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ இந்தத் தகவலை வெளியிட்டார்.

சிங்கப்பூர் மாணவர்களிடம் முழுமையான மேம்பாடு, மீள்திறன், சூழலுக்கேற்பத் தகவமைத்துக் கொள்ளுதல் போன்ற அம்சங்களை மேம்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு மேற்கொண்டுவரும் பணிகள் குறித்தும் அவர் கூறினார்.

இணையத்தில் வெளிவந்த சில துன்புறுத்தல் சம்பவங்கள் 2025ல் தேசிய அளவிலான கவனத்தை ஈர்த்தன. அத்தகைய ஒரு சம்பவத்தில் தொடக்கப்பள்ளி 3ஆம் வகுப்பு மாணவர்கள் மூவர், தங்களுடன் பயிலும் மாணவியின் தாயாருக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்களில் ஒருவருக்குப் பிரம்படி விதிக்கப்பட்டது.

பள்ளிகளில் துன்புறுத்தல் சம்பவங்களை மேம்பட்ட முறையில் கையாள்வது தொடர்பான மறுஆய்வைக் கல்வி அமைச்சு 2025 முற்பகுதியில் தொடங்கியது. பள்ளிக் கலாசாரத்தையும் செயல்முறைகளையும் வலுப்படுத்துதல், மாணவர்களுக்கு விழுமியங்களைக் கற்றுத்தருவதில் கூடுதல் கவனம் செலுத்துதல், கல்வியாளர்களுக்கு ஆதரவு வழங்குதல், பெற்றோருடனான பள்ளிகளின் பிணைப்பை மேம்படுத்துதல் என நான்கு அம்சங்களில் இந்த மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நேரடியாகவும் இணையம் வாயிலாகவும் கருத்துகள் திரட்டப்பட்டதாக அமைச்சர் லீ கூறினார்.

நீதியைப் போதிக்கும் உண்மைச் சம்பவங்கள், மாணவர்களிடம் மரியாதையையும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் திறனையும் ஊக்குவிக்கும் வகையில் சில கற்பனைச் சூழலில் பாத்திரமேற்று நடித்தல் போன்ற உத்திகளைப் பயன்படுத்தி விழுமியங்கள் தொடர்பான கல்வியை மேம்படுத்தலாம் என்ற கருத்தும் அவற்றில் அடங்கும்.

பெற்றோர்க்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை, கருத்துரைத்த அனைத்துத் தரப்பினரும் முன்வைத்தனர். பள்ளிகளுக்கு அப்பால் பிள்ளைகள் சந்திக்கக்கூடிய சூழல்களில் பெற்றோர் அவர்களுக்கு வழிகாட்ட அது உதவும் என்று அவர்கள் கூறியதாக அமைச்சர் லீ குறிப்பிட்டார்.

கல்வியில் செயற்கை நுண்ணறிவு எனும் உத்தி தொடர்பில் உயர்கல்வி நிலையங்கள், சிறப்புத் தேவையுடையோர்க்கான பள்ளிகள் போன்றவற்றுடன் கல்வி அமைச்சு இணைந்து பணியாற்றுவதாக அவர் தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான அமைச்சின் வரவுசெலவுத் திட்டத்தில் இதுகுறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அதற்கான கட்டமைப்பு இவ்வாண்டுப் பிற்பகுதியில் அறிவிக்கப்படும் என்றும் திரு லீ சொன்னார்.

செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தைக் கையாண்டு, மாறிவரும் உலகச் சூழலைப் புரிந்துகொள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில், பண்பியல்பு மற்றும் குடியுரிமைக் கல்விக்கான (Character and Citizenship Education) பாடத்திட்டம் விரிவாக மறுஆய்வு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்