கொழும்பு: இலங்கையில் பட்டாம்பூச்சிகளையும் இதர பூச்சிகளையும் கடத்த முயன்ற இரண்டு வெளிநாட்டவர்களுக்கு 200,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
‘சஃபாரி’ பூங்காவிலிருந்து 92 வகையான பட்டாம்பூச்சிகள் உட்பட நூற்றுக் கணக்கான பூச்சிகளை கடத்த இத்தாலியைச் சேர்ந்த தந்தையும் மகனும் முயற்சி செய்தனர். இருவருக்கும் 60 மில்லியன் இலங்கை ரூபாய் ($200,000) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
யாலா தேசிய பூங்காவில் பூச்சிகள் அடைக்கப்பட்ட ஜாடிகளுடன் இருந்த 68 வயது லுய்கி ஃபெராரியையும் அவரது 28 வயது மகன் மாட்டியாவையும் கடந்த மே மாதம் அதிகாரிகள் கைது செய்தனர்.
இருவரும் பூச்சிகளைக் கவர்ந்து இழுக்கும் மருந்துகளைப் பயன்படுத்தி சேகரித்து அவற்றை ரசாயன முறையில் பாதுகாக்க மெழுகுப் பைகளை பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
பூச்சிகளை சட்டவிரோதமாக சேகரித்தது, வைத்திருந்தது, அவற்றைக் கடத்த முயற்சி செய்ததற்காக செப்டம்பர் தொடக்கத்தில் அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மேலும் வனவிலங்கு கடத்தல் குற்றங்களுக்காக இதுவரை இல்லாத அளவுக்கு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பூங்கா அதிகாரிகளில் ஒருவரான கே. சுஜீவா நிஷாந்தா, சம்பவத்தன்று பூச்சிகளை வலைகள் போட்டு பிடிக்கும் இருவரின் சந்தேகமான கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தனது குழுவிடமிருந்து தகவல் வந்ததாக பிபிசியிடம் கூறினார்.
“அந்தக் காரை அடையாளம் கண்டுபிடித்தபோது அதில் பூச்சிகள் அடைக்கப்பட்ட நூற்றுக் கணக்கான ஜாடிகள் இருந்தன. பூச்சிகள் அனைத்தும் இறந்துகிடந்தன. போத்தலில் இருந்த ரசாயனத்தில் பூச்சிகள் அடைக்கப்பட்டிருந்தன,” என்று நிஷாந்தா கூறினார்.
ஆரம்பத்தில் இருவர் மீதும் 810 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பின்னர் 304 குற்றச்சாட்டுகளாகக் குறைக்கப்பட்டன. இருவரும் செப்டம்பர் 24ஆம் தேதிக்குள் அபராதத்தை கட்டத் தவறினால் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.