ஒட்டாவா: கனடாவின் பிரதமர் மார்க் கர்னியின் அரசாங்கம் வியாழக்கிழமை (நவம்பர் 5) அதன் வரவுசெலவுத் திட்டத்தை வழங்கவுள்ளது.
அமெரிக்காவைச் சார்ந்திருக்காத வகையில் திட்டம் அமையவேண்டும் என்பதில் கனடா முக்கியக் கவனம் செலுத்திவருகிறது.
இடைத் தவணைக்கால தேர்தலில் அதிபர் டிரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியடைந்துள்ள நிலையில் கனடாவின் இந்த நிலைப்பாடு வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவுடனான உறவுகள் நிரந்தரமாக மாற்று திசைநோக்கிச் சென்றுவிட்டதாக கருத்துரைத்த பிரதமர் கார்னி, தேர்தலுக்கு முன் நிலவிய வர்த்தக வரிகளுக்கான குறிப்பிட்டச் சலுகைகளை எதிர்பார்த்திருக்க முடியாது என்றார்.
கனடா அதன் வர்த்தக உறவுகளை உடனடியாக விரிவுபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திய பிரதமர், வரவுசெலவுத் திட்டத்துக்கு “நமது எதிர்காலத்துக்கு நாமே தலைமையேற்போம்” என்று பொருள்படும் விதமாக ‘மாஸ்டர்ஸ் அஃப் ஔவர் டெஸ்டினி’ எனப் பெயரிட்டுள்ளார். கடந்த 2025ல் பிரதமர் பதவியேற்றபிறகு அவர் வெளியிடும் இரண்டாவது வரவுசெலவுத் திட்டம் அதுவாகும்.
“ வளர்ச்சிப் பாதையை மறுவடிவமைப்பது எங்களது திட்டத்தின் மையக் கூறு,” என்று நிதி அமைச்சர் ஃபிரான்கொய்ஸ் பிலிப் ஷெம்பெய்ன் விவரித்தார்.
வர்த்தகத்தை விரிவாக்குவதோடு உள்நாட்டு வர்த்தகத்துக்கு ஊக்கமளிப்பது முக்கிய இலக்குகளாகும் என்று நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டத்தை வழங்கவிருக்கும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
“அதிக வலிமையுடன் சுதந்திரமாக நாட்டின் கிழக்கில் உள்ள எல்லையில் எது நடந்தாலும், உலகில் எது நேர்ந்தாலும் நாங்கள் மீள்திறனுடன் செயல்படுவோம்,” என்று அவர் உறுதிகூறினார்.
அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் கனடாவின் பொருளியலை பெருமளவு பாதித்தது. இருப்பினும் அவரது ‘சொந்த நாட்டை மட்டுமே பாதுகாத்துக்கொள்ளும்’ வர்த்தக நடவடிக்கைகள் தேர்தல் தோல்விக்குப் பிறகு நிச்சயமற்ற நிலையை எட்டியுள்ளது.
அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினர் அதிபர் டிரம்ப்பின் அரசாங்கம் கனடாவுக்கு விதித்த தீர்வைகளைக் கண்டித்து வந்தனர். அக்கட்சியினர் அமெரிக்க அரசாட்சியின் இரு சபைகளிலும் அண்மையத் தேர்தலுக்குப் பிறகு 2027முதல் பெரும்பான்மை வகிக்கவிருப்பதால், கனடாவுக்கு அது சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“சிறந்த நட்பு நாடான கனடாவுடன் உறவுகளை சீரமைத்து அதற்கு விதிக்கப்பட்ட வர்த்தக வரிகளை முடிவுக்கு கொண்டுவருவோம்,” என்று அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் மூத்த காங்கிரஸ் உறுப்பினர் ஜெமி ரஸ்கின் புதன்கிழமை கூறியிருப்பதும் கவனத்துக்குரியது.
