சிபு: மலேசியாவின் சராவாக் மாநிலத்தில் தேசிய தேர்வுகளை எழுதும் மாணவர்கள் சிலரை அந்நாட்டின் குடிமைத் தற்காப்புப் படையினர் பள்ளிக்கு அழைத்துச்சென்றனர்.
திங்கட்கிழமையன்று (ஜனவரி 13) ஏழு மாணவர்களைக் குடிமைத் தற்காப்புப் படை பள்ளிக்கு அழைத்துச் சென்றது. வெள்ளம் காரணமாக குடிமைத் தற்காப்புப் படையினர் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினர்.
சம்பந்தப்பட்ட எஸ்எம்கே குவோங் ஹுவா உயர்நிலைப் பள்ளிக்குச் (SMK Kwong Hua high school) செல்வதற்கான பாதையில் ஞாயிற்றுக்கிழமை முதல் கனரக வாகனங்கள் மட்டுமே போகக்கூடிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இரண்டு நாள்கள் நீடித்த கனமழையால் ராஜாங் ஆறு நிரம்பி வழிந்தது அதற்குக் காரணம்.
இந்நிலையில், கானோவிட் நகரில் உள்ள ஜாலான் லுக்குட்-பென்யுலாவ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒரு கார் சிக்கிக்கொண்டது. கானோவிட் நிலையத்தைச் சேர்ந்த சராவாக் மாநில தீயைணைப்பு, மீட்புப் படையினர் அந்த காரில் இருந்த குடும்பத்தைக் காப்பாற்றினர்.
அந்த காரிலிருந்து மீட்கப்பட்டவர்கள் ஒரு கணவன்-மனைவி தம்பதியர், அவர்களின் நான்கு மாதக் குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.