தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெள்ள நிவாரணத் தொகைக்கு நன்றியுரைத்த கெடா முதல்வர்

1 mins read
f6890c35-37ef-4636-9899-8b4192dd65d0
13 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்கிய மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம்முக்கு கெடா முதல்வர் திரு முகம்மது சனுசி முகம்மது நூர் (வலது) நன்றி தெரிவித்துக்கொண்டார். - படங்கள்: மலேசியாகினி

அலோர் ஸ்டார்: மலேசியாவின் கெடா மாநிலத்துக்கு வெள்ள நிவாரணத் தொகையாக 13 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்தார்.

இதற்கு அம்மாநில முதல்வர் முகம்மது சனுசி முகம்மது நூர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

கெடாவில் வெள்ளம் காரணமாகச் சேதடைந்துள்ள உள்கட்டமைப்பைப் பழுதுபார்க்கவும் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உதவி வழங்கவும் சேதமடைந்த வீடுகளை மறுசீரமைக்கவும் அந்த நிதி பயன்படுத்தப்படும் என்று திரு சனுசி செப்டம்பர் 22ஆம் தேதியன்று தெரிவித்தார்.

வெள்ளத்தால் அதிக இழப்பும் சேதமும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட திரு சனுசி, கூடுதல் நிதியுதவி வழங்குவது குறித்து கூட்டரசு அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கெடாவில் அமைக்கப்பட்டுள்ள துயர்துடைப்பு நிலையம் ஒன்றுக்கு செப்டம்பர் 21ஆம் தேதியன்று பிரதமர் அன்வார் நேரில் சென்று பாதிப்படைந்தோரைச் சந்தித்துப் பேசினார்.

துயர்துடைப்பு நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1,000 ரிங்கிட் நிதியுதவியை மாநில அரசு வழங்கும் என்று தமது அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டதாக திரு சனுசி கூறினார்.

இதுவரை ஏறத்தாழ 2,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டு கரைபுரண்டோடிய வெள்ளம் 2010ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தைவிட மோசமானது என்றார் அவர்.

கெடாவின் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திரு சனுசி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்