பெய்ஜிங்: சீனா அதன் தற்காப்புக்காகக் கூடுதலாகச் செலவு செய்ய இருக்கிறது.
இவ்வாண்டுக்கான தற்காப்பு நிதியை அது 7.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.
சீனாவின் தேசிய மக்கள் காங்கிரசின் வருடாந்தரக் கூட்டம் புதன்கிழமை (மார்ச் 5) தொடங்கியது.
அதில் சீன அரசாங்கத்தின் வரவுசெலவு மதிப்பீட்டில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
தற்காப்புச் செலவுகளுக்காக 1.784 டிரில்லியன் யுவான் (S$330 பில்லியன்) ஒதுக்கப்படுகிறது.
சீனாவின் தேசிய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த பேராளர்கள், உயர் அரசியல் ஆலோசகர்கள் என ஆயிரக்கணக்கானோர் இவ்வாரம் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் தேசிய மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
2016ஆம் ஆண்டிலிருந்து தற்காப்புக்காக ஆண்டுதோறும் சீனா ஒதுக்கிய நிதி பெரும்பாலும் 7 விழுக்காடாக இருந்து வந்துள்ளது.
தற்காப்புச் செலவுகளுக்காக அதிக நிதி ஒதுக்கும் நாடுகள் பட்டியலில் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்கா, தற்காப்புக்காக சீனா ஒதுக்கும் நிதியைவிட பன்மடங்கு அதிகம் ஒதுக்குகிறது.
இந்நிலையில், சீனாவின் பொருளியல் மெதுவடைந்து வரும் நிலையில், தற்காப்புச் செலவு ஏற்றத்தை அது எவ்வாறு தாக்குப்பிடிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமூகக் காப்புறுதி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முதலீடு போன்றவற்றுக்கும் சீனா முன்னுரிமை கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.
2050ஆம் ஆண்டுக்குள் உலகத் தரம்வாய்ந்த போர்ப் படையை வைத்திருக்க சீனா இலக்கு கொண்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, 2027ஆம் ஆண்டுக்குள் தைவானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள சீனா தீவிரம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
2027ஆம் ஆண்டில் சீன ராணுவம் அதன் நூற்றாண்டு விழாவை அனுசரிக்கவிருக்கிறது.
சீன ராணுவம் 1927ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இதற்கிடையே, உயர்தர ராணுவ ஆயுதங்களைச் சீனா தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
உதாரணத்துக்கு, 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிலத்திலும் நீரிலும் பயன்படுத்தக்கூடிய போர்க் கப்பலை அது அறிமுகப்படுத்தியது.
2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தையும் அது அறிமுகப்படுத்தியது.

