மாஸ்கோ: சீனாவும் ரஷ்யாவும் எப்போதும் நண்பர்கள், ஒரு போதும் விரோதிகள் அல்ல என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி செவ்வாய்க் கிழமை அன்று (ஏப்ரல்1) மாஸ்கோவுக்குப் பயணம் மேற்கொண்டபோது தெரிவித்தார்.
வாஷிங்டனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான அறிகுறிகளையும் அவர் வரவேற்றார்.
சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ‘எப்போதும் நண்பர்கள், ஒருபோதும் எதிரிகள் அல்ல’ என்ற கொள்கை உயர் மட்டத்தில் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கான உறுதியான அடித்தளமாகச் செயல்படுகிறது,” என்று ரஷ்யாவின் ஆர்ஐஏ அரசு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் திரு வாங் குறிப்பிட்டார்.
உக்ரேனில் போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள தொய்வு, ரஷ்ய மற்றும் உக்ரேன் தலைவர்கள் மீதான அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் விமர்சனம் ஆகியவற்றுக்கு மத்தியில் ரஷ்யாவின் உத்திபூர்வ ஒத்துழைப்பு குறித்து பேசுவதற்காக சீன அமைச்சர் வாங் மாஸ்கோவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிப்ரவரி 2022ல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை உக்ரேனுக்கு அனுப்புவதற்கு சில நாள்களுக்கு முன்பு சீனாவும் ரஷ்யாவும் தங்களுடைய உறவுக்கு வரம்புகள் இல்லை என்று அறிவித்தன.
இது, இரு நாடுகளுக்கு இடையிலான வலுவான பிணைப்பை வெளிப்படுத்தியது.
கடந்த பத்து ஆண்டுகளில் சீன அதிபர் ஸி ஜின்பிங் 40 முறைகளுக்கு மேல் புட்டினைச் சந்தித்துள்ளார். அப்போதிலிருந்து இருதரப்பு உறவை ஆழப்படுத்தவும் தைவான் உள்ளிட்ட விவகாரங்களில் ஒத்துழைக்கவும் இரு தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.
இந்நிலையில் திரு வாங்கை அதிபர் புட்டின் வரவேற்பார் என்று மார்ச் 31ஆம் தேதி கிரெம்ளின் தெரிவித்தது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவையும் திரு வாங் சந்தித்துப் பேசுகிறார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போதை உலகளாவிய சூழ்நிலையில் பெரிய சக்திவாய்ந்த நாடுகள் நிலைமையை சீராக்கும் காரணிகளாகச் செயல்பட வேண்டிய நிலையில் இருப்பதாக திரு வாங் கூறினார்.
ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உறவுகள் மேம்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, உக்ரேன் சண்டை நிறுத்தத்திற்கான சாத்தியமான ஒப்பந்தம் ஏற்படுவது குறித்து அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக மார்ச் 31ஆம் தேதி கிரெம்ளின் மாளிகை அறிவித்தது.
கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து ரஷ்யாவுடன் இணைக்கமான போக்கை கடைபிடித்து வருகிறார்.
ஆனால் உக்ரேன் சண்டை நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள அவர் ரஷ்யாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தி வருகிறார்.

