பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதன்கிழமை (மே 13) முதல் வெள்ளிக்கிழமை (மே 15) வரை சீனாவுக்கு இரண்டுநாள் வருகை தருவார் என்று பெய்ஜிங் திங்கட்கிழமை (மே 11) உறுதிசெய்தது.
சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் நடக்கும் சந்திப்பில் இருவரும் ஈரான் போர் குறித்தும் இருநாட்டு வர்த்தக நிலவரம் பற்றியும் விவாதிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்குக்கும் இடையே வர்த்தக வரிகள், தைவான் இறையாண்மை, மத்திய கிழக்குப் போர் ஆகிய பிரச்சினைகள் குறித்து கருத்துவேறுபாடு நிலவுகிறது.
இவ்வாண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் அங்கு செல்லவிருந்த அதிபர் டிரம்ப், ஈரான் போரினால் அதனை தள்ளிவைத்தார்.
“சீன அதிபர் ஸி ஜின்பிங் அழைப்பை ஏற்று, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சீனாவுக்கு மே 13 முதல் மே 15 வரையில் அதிகாரபூர்வ வருகை தருவார்,” என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஆறு மாதங்களில் முதன்முறையாக உலகின் இருபெரும் பொருளியல் நாடுகளின் தலைவர்கள் நேரடியாகச் சந்திக்கவிருக்கின்றனர்.
அதிபர் டிரம்ப் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளும் முதல் சீனப் பயணமாக இது அமையும்.
விமான விற்பனை, விவசாயம், வர்த்தகம்
அதிபர்கள் சந்திப்பில் இருநாட்டு வர்த்தகங்களுடன் முதலீடுகள் குறித்தும் பேசப்படும். போயிங் வகை விமானங்களை வாங்குவது குறித்தும் அறிவிக்கப்படலாம் என சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்க வேளாண் துறை, எரிபொருள் ஆகியவை பற்றியும் விவாதங்கள் இடம்பெற வாய்ப்புண்டு.
இருநாடுகளின் வர்த்தகத்துக்கும் முதலீட்டுக்கும் தனிப்பட்ட வாரியம் ஒன்றை அமைப்பது பற்றிய திட்டம் இந்தச் சந்திப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம். ஆனால் அதற்கான தொடக்கப் பணிகள் ஆராயப்படவேண்டியுள்ளது.
வர்த்தக வரி சார்ந்த முரண்பாடு சற்று ஓய்ந்துள்ள வேளையில், அதனை அதே நிலையில் வைத்துக்கொண்டு, சீனாவிலிருந்து அரிய வகை கனிமங்கள் அமெரிக்காவில் இறக்குமதி ஆவதை நீட்டிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படுமா என்பது தெளிவாக அறிவிக்கப்படவில்லை. ஆயினும் கனிம வளங்கள் பற்றி சந்திப்பில் பேசப்படும் என்பது மட்டும் தெரிகிறது.

