நோம் பென்: தென்கிழக்காசியப் பகுதியில் பல பில்லியன் டாலர் மதிப்பிலான இணையவழிக் குற்றச் சம்பவங்களைக் கூட்டுச் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மூலம் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகச் சீன அரசு தெரிவித்துள்ளது.
கம்போடியத் தலைநகர் நோம் பென்னில் நடைபெற்ற இணையவழி மோசடிகளைத் தடுப்பதற்கான அனைத்துலக மாநாட்டில் சீனப் பொதுப் பாதுகாப்புத் துணை அமைச்சர் யாங் வெய்லின் இவ்வாறு கூறினார். மாநாட்டில் பேசிய அவர், “நீண்டகாலக் கடினப் பயிற்சிக்குப் பிறகு, இச்சிக்கலுக்குத் தீர்வு காண மக்களை மையமாகக் கொண்ட சீன அணுகுமுறையை உருவாக்கியுள்ளோம்,” என்றார்.
மேலும், மியன்மாருடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கைகளின் மூலம் அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் இயங்கிவந்த தொலைத்தொடர்பு மோசடி முகாம்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், மோசடிக் கும்பல்கள் விரைவாகத் தங்களை மாற்றியமைத்து வருவதாக அனைத்துலகச் சட்ட அமலாக்க அமைப்புகளும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புகளும் எச்சரித்துள்ளன. கம்போடியா, மியான்மரில் உள்ள பெரிய மையங்கள் அகற்றப்பட்டாலும், இக்குழுக்கள் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியப் பகுதிகளுக்குச் செயல்பாடுகளை மாற்றி, உலக அளவில் ஏறக்குறைய 440 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொள்ளையடித்ததாகத் தெரிகிறது.
இம்மாநாட்டில் உரையாற்றிய இன்டர்போல் அமைப்பின் பணிக்குழு ஒருங்கிணைப்பு இயக்குநர் நிக்கோலஸ் கோர்ட், மோசடி தொடர்பான அரசாங்க உத்தரவுகள் கடந்த ஈராண்டுகளில் 50 விழுக்காட்டிற்குமேல் அதிகரித்ததாகக் குறிப்பிட்டார்.
கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட், இணையக் குற்றங்களை அரசியலாக்காமல் அனைத்துலகச் சமூகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனத் தமது உரையில் கேட்டுக்கொண்டார்.
