தைவானைச் சுற்றிய பகுதிகளில் சீனா போர்ப் பயிற்சி

2 mins read
e7413b31-16f9-496f-b7cb-2b0b7b1871fd
சீனா 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு, பெரிய அளவிலான போர்ப் பயிற்சிகளை ஆறாவது முறையாக மேற்கொண்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங் / தைப்பே: திங்கட்கிழமை (டிசம்பர் 29) தொடங்கிய இரண்டு நாள் போர்ப் பயிற்சிகளில், சீனா விமானந்தாங்கிக் கப்பல்களையும் ஈடுபடுத்தியது. அவற்றுடன் போர்க் கப்பல்களும் குண்டுவீசித் தாக்கும் விமானங்களும் பயிற்சியில் சேர்ந்துகொண்டன.

தைவானைச் சுற்றி வளைப்பது போன்ற பாவனைப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தைவானைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சீனக் கடற்கரைக்கு அப்பாலும் ஐந்து இடங்களில் கடற்புறத்திலும் ஆகாயவெளியிலும் உண்மையான தோட்டாக்களைப் பயன்படுத்திப் பயிற்சிகள் இடம்பெற்றதாகச் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தெரிவித்தது.

தைவானின் வட, தென்பகுதிகளில் சீனாவின் கடற்படையும் ஆகாயப்படையும் இலக்குகளைக் குறிவைத்துப் பயிற்சிகளில் ஈடுபட்டன. நீர்மூழ்கிக்கப்பல்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதைப் போன்ற ஒத்திகைகளும் இடம்பெற்றன.

சீனாவின் போர்ப் பயிற்சிகளுக்கு, “ஜஸ்டிஸ் மி‌ஷன் 2025” என்று பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 11.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதத் திட்டத்தைத் தைவானுக்கு வழங்குவதாக அறிவித்து 11 நாளான நிலையில் சீனா பயிற்சிகளை நடத்துகிறது.

சீனாவின் அண்மைய பயிற்சி ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஆகப் பெரியது என்று கூறப்படுகிறது.

அந்தப் பயிற்சி, பொறுப்பான வல்லரசிடம் என்ன எதிர்பார்க்கப்படுமோ அதற்கு முரணாய் அமைந்துள்ளதாகத் தைவானிய அதிபர் லாய் சிங்-த ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்திருந்தார்.

பாவனைப் பயிற்சிகள் நடத்தப்பட்டதைத் தைவானியத் தற்காப்பு அமைச்சு உறுதிப்படுத்தியது.

அவற்றால் தைப்பேயின் 14 விமானப் பாதைகளில் 11 பாதிக்கப்பட்டதாகத் தைவானின் குடிமை விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. அனைத்துலக விமானச் சேவைகளுக்கு ஏற்பட்ட இடையூறுகள் மிகக் குறைவே என்றும் கூறப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணி நிலவரப்படி, 24 மணிநேரத்தில், 130 சீன ராணுவ விமானங்களும் 22 கடற்படை, கடலோரக் காவற்படைக் கப்பல்களும் தீவைச் சுற்றி இயங்கியதாகத் தைவானின் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்