பெய்ஜிங்: அமெரிக்காவுக்குத் தொழில்நுட்பம் கசிவதாகக் கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட ஒரு சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தை ரத்து செய்யும் ஒரு எதிர்பாராத நடவடிக்கையாக, ஏஜென்டிக் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்ப நிறுவனமான மானுஸை 2 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (S$2.5 பில்லியன்) மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் கையகப்படுத்துவதைத் தடுத்து நிறுத்த சீனா முடிவு செய்துள்ளது.
சீனாவின் தேசிய மேம்பாடு, சீர்திருத்த ஆணையம் திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 27) வெளியிட்ட ஒரு சுருக்கமான அறிக்கையில், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.
சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ஆணையம் தனது ஒரு வரி அறிவிப்பில் தெரிவித்துள்ளது. எனினும் இது குறித்து அது விரிவாக விளக்கவில்லை.
இது குறித்த கருத்துக் கோரிக்கைகளுக்கு மெட்டா பேராளர்கள் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான உச்சநிலைச் சந்திப்பிற்குச் சில வாரங்களுக்கு முன்பு வந்துள்ள இந்த முடிவு, சீனாவின் வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

