வாஷிங்டன்: அமெரிக்காவுடன் வரிகள் தொடர்பாகச் செய்துகொண்ட உடன்பாட்டைச் சீனா மீறிவிட்டதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
“சீனா எங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முழுமையாக மீறிவிட்டது. மிகவும் நல்லவராக இருந்ததற்கு இப்படியா?” என்று திரு டிரம்ப் தமது ட்ருத் சோஷியல் தளத்தில் பதிவிட்டார்.
சீனாவுடனான அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை பாதியில் நின்றுவிட்டது என்றும் உடன்பாட்டை எட்ட அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் நேரடியாகக் களமிறங்கவேண்டும் என்றும் அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறினார்.
இரு வாரங்களுக்குமுன் நடைபெற்ற சமரசப் பேச்சின் முடிவில் உலகின் இரு பெரிய வல்லரசுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால், அது முதற்கொண்டு பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை என்ற திரு பெசன்ட், அடுத்த சில வாரங்களில் கூடுதல் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்று நம்புவதாகவும் சொன்னார்.
அமெரிக்காவும் சீனாவும் 90 நாள்களுக்குப் புதிய வரிவிதிப்பை நிறுத்திவைத்ததை அடுத்து அனைத்துலகத் தரப்புகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டன.