சீனா: சூறாவளியால் கனமழை, பெருவெள்ளம்

சீனா: சூறாவளியால் கனமழை, பெருவெள்ளம்

2 mins read
பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
ae2dfb54-e0c8-46d0-a4b9-f8e54273d65a
வெள்ளத்தில் சிக்கிய குடியிருப்பாளர்களை மீட்புப் பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 23), படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்குப் பகுதியான குவாங்சியில் நாரா சூறாவளியால் பெய்த கனமழை கடுமையான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர நேரிட்டது. வரும் நாள்களில் மேலும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாகக் கிட்டத்தட்ட 54,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகச் சீன அரசாங்கத் தொலைக்காட்சியான சிசிடிவி செய்தி வெளியிட்டது. அவர்களுள் 8,087 பேர் அவசரகால நிவாரணக் கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அங்குள்ள 15 ஆறுகளில் நீர்மட்டம் அபாயகரமான அளவை நெருங்குவதாகக் கண்காணிப்பு நிலையத் தகவல்கள் கூறுகின்றன.

சொங்சுவோ நகரின் பல பகுதிகளைச் சேற்று நீர் சூழ்ந்துள்ளதை விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் காட்டுகின்றன. அந்நகரின் முக்கியச் சாலைகளும் தாழ்வான கட்டடங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

மீட்புக்குழுவினர் முழங்கால் அளவு வெள்ள நீரில் நடந்து சென்று, ரப்பர் படகுகள் மூலமாக, சிக்கித் தவித்த குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர்.

தென்சீனக் கடலின் வடமேற்குப் பகுதியில் உள்ள பெய்பு வளைகுடாப் பகுதியில் நாரா சூறாவளி பல நாள்களாக நிலைகொண்டுள்ளது. இதனால் குவாங்சி, ஹைனான், குவாங்டோங் ஆகிய வட்டாரங்களில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. குவாங்சி, குவாங்டோங், ஹைனான், ஃபூஜியான் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஆகஸ்ட் 26) வரை கனமழை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மோசமான வானிலை காரணமாக ஹைனானின் வென்சாங் விண்வெளி ஏவுதளத்திலிருந்து திங்கட்கிழமை நிலவை நோக்கிச் செலுத்தப்படவிருந்த ‘சாங்-ஈ-7’ ஆளில்லா விண்கலத் திட்டத்தைச் சீனா ஒத்திவைத்தது. விண்கலம் ஏவுவதற்கான உகந்த சூழல் நிலவவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

அந்த விண்கலத்தில் அறிவியல் சோதனைக் கருவிகளை அனுப்பும் தாய்லாந்து தேசிய வானியல் ஆய்வு நிறுவனம், சூறாவளியால்தான் இந்தத் திட்டம் தாமதமானதாகத் தெரிவித்தது. இருப்பினும், விண்கலத் திட்டத் தாமதம் குறித்துச் சீனா உடனடியாகக் கருத்துரைக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்