பெய்ச்சிங்: தென்சீனக் கடலில் நீர்மூழ்கிகளுக்கு எதிரான தீவிரப் பயிற்சிகளை அண்மையில் நடத்தியதாக சீன ராணுவம் கூறியது.
அண்டைநாடுகளுடனும் அவற்றின் நட்பு நாடுகளுடனும் கடல்துறை சார்ந்த நெருக்கடிகள் அதிகரித்துவரும் நிலையில் சீனா தனது ஆற்றல்களை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதி அது.
தென்சீனக் கடலின் ஒரு பகுதியில் நீர்மூழ்கிகளுக்கு எதிரான பல கண்காணிப்பு விமானங்கள் 40 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் செயல்பட்டன. அவை நீர்மூழ்கிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டதோடு பாவனைத் தாக்குதல்களையும் மேற்கொண்டன.
அந்தப் பயிற்சி இரவு பின்னேரத்திலும் அதிகாலையிலும் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
சீனாவுக்குச் சொந்தமில்லாத நீர்மூழ்கிகள் அந்தப் பகுதியில் அடையாளம் காணப்பட்டனவா என்பது தெரிவிக்கப்படவில்லை.
இவ்வாண்டு இடம்பெற்றிருக்கும் அத்தகைய பயிற்சிகளில் அண்மைய பயிற்சியும் ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டது.