எல்லை தாண்டிய சூதாட்டம், இணைய மோசடிக்குத் தீர்வுகாண ஆசியானுடன் கைகோக்கும் சீனா

3 mins read
ef43c430-7236-4cd5-9dbd-ec77eaba2274
லங்காவி அனைத்துலக மாநாட்டு மையத்தில் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்ட ஏற்பாடுகளை வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) பார்வையிட்டார் மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசான். - படம்: பெர்னாமா

லங்காவி: இந்த வட்டாரத்தில் இணைய மோசடிகள், சூதாட்டம் ஆகிய பிரச்சினைகளுக்கு ஆசியானுடன் இணைந்து தீர்வு காண சீனா முன்வைத்துள்ள யோசனை குறித்து ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் விவாதிக்க உள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசான் கூறியுள்ளார்.

லங்காவி அனைத்துலக மாநாட்டு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் (ஏஎம்எம்) நடைபெறுகிறது.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஆசியான் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் மூத்த அதிகாரிகளும் இதில் கலந்துகொள்கின்றனர்.

“உலகம் முழுவதும் உள்ள புவியியல் அரசியல், பொருளியலைப் பார்க்கும்போது, ஆசியான் அவற்றுடன் இணைந்து செயல்படாதது இழப்பு,” என்று சனிக்கிழமை (ஜனவரி 18) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னோட்டமாக நடந்த மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் முகமட் கூறினார்.

“எனவே, ‘அனைவரையும் உள்ளடக்குதல், நிலைத்தன்மை’ என்ற கருப்பொருளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். நாம் அனைவரையும் உள்ளடக்கியவர்களாக, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,” என்றார் அவர்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இணைய சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடிகளை ஒடுக்க ஆசியான் நாடுகள் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஜனவரி 16 அன்று கேட்டுக்கொண்டார்.

தாய்லாந்து - மியன்மார் எல்லையில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான இணைய சூதாட்டம், தொலைதொடர்பு மோசடிச் சம்பவங்கள் சீன மக்களுக்கும் மற்ற நாடுகளின் மக்களுக்கும் தீங்கு விளைவிப்பதாக வாங் ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க சட்ட அமலாக்கம், பாதுகாப்பு ஆகியவற்றில் ஆசியான் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.

இம்மாதத் தொடக்கத்தில், தாய்லாந்து - மியன்மார் எல்லையில் காணாமல் போன சீன நடிகர் ஒருவர் மியான்மார் வட்டாரத்தில் காணப்பட்டார். அவர் ஆள் கடத்தல் சம்பவத்துக்கு பலியானவர் என்று நம்புவதாக தாய்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இணைய மோசடிகள், சட்டவிரோத சூதாட்டம், ஆட்கடத்தல் போன்றவை கடந்த சில ஆண்டுகளாக ஆசியான் நாடுகளைப் பாதிக்கும் பிரச்சினையாக இருந்து வருகின்றன.

இந்தக் கூட்டத்தில் பரந்த அளவிலான வட்டார, அனைத்துலக பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் முகமட் ஹசான் கூறினார்.

இந்த ஓய்வுத்தளச் சந்திப்பில் ஆசியானின் உத்திபூர்வ இலக்கு, ஆசியான் சமூகத்தை வலுப்படுத்தும் முயற்சிகள், வெளிப்புற உறவுகள் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மியான்மார் நெருக்கடி, புவிசார் அரசியல் பதட்டங்கள், வட்டார அமைதி, நிலைத்தன்மையை பாதிக்கும் பிற சவால்கள் உட்பட வட்டார, அனைத்துலக பிரச்சினைகளில் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வார்கள்.

ஆசியான், இருதரப்பு உறவு ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்து பேச்சு நடத்த வெளியுறவு அமைச்சர் தங்களது சகாக்களுடன் இருதரப்புச் சந்திப்புகளை நடத்தவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வர் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இந்தக் கூட்டம் இந்த ஆண்டு ஆசியானின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள மலேசியாவின் தலைமைத்துவ பாணியை நிர்ணயிக்கும்.

குறிப்புச் சொற்கள்