மின்சிகரெட் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் சீனா: உள்நாட்டில் தடை

1 mins read
1fb0ca6e-ae17-429a-b449-b7d495a68bbd
சென்ஷென் நகரில் உள்ள சிறு தொழிற்சாலையில் மின்சிகரெட்டுகள் மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் தயாராகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சென்ஷென்: உலகின் 90 விழுக்காடு மின்சிகரெட் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னிலை வகிக்கும் சீனா அதனை உள்நாட்டில் தடை செய்துள்ளது.

அதனால் சீனா இரட்டை வேடம் போடுகிறது என்று அனைத்துலக சுகாதார ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மில்லியன் கணக்கில் மின்சிகரெட்டுகள் சீனத் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகின்றன. குறிப்பாக சென்ஷென் மாநிலமும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் மின்சிகரெட் உற்பத்திக்கென பல தொழிற்சாலைகளை உருவாக்கியுள்ளன.

ஆகவே சீனாவின் மின்சிகரெட் தலைநகராக (Vape Valley) அம்மாநிலம் பெயர்பெற்றுள்ளது.

பல சுவைகளில், வண்ணங்களில் மின்சிகரெட்டுகள் தயாராகி அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் ஜப்பான், வியட்னாம், மலேசியா போன்ற ஆசிய நாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

வெளிநாடுகளில் பலரின் சுகாதாரத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்கும் மின்சிகரெட்டுகள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது முரண்பாடாக அமைந்துள்ளது. உலகின் பல நாடுகளில் மின்சிகரெட்டுக்கு அடிமையாகும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதேவேளையில் உள்நாட்டில் அந்தப் பழக்கத்தை முற்றிலும் வளரவிடாமல் சீனா தனது குடிமக்களைக் கவனமாகப் பாதுகாத்துக் கொள்கிறது.

சீன சுங்கத் துறை தரவுகளின்படி, கடந்த அக்டோபர் மாதம் மட்டும் S$1.41 பில்லியன் (US$1.098 பில்லியன்) மதிப்புள்ள மின்சிகரெட்டுகளையும் அது சார்ந்த மூலப் பொருள்களையும் சீனா ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டைவிட இது ஏறத்தாழ 23.7விழுக்காடு அதிகமாகும்.

குறிப்புச் சொற்கள்