ஜப்பானைக் கட்டுப்படுத்த அமெரிக்காவை சீனா நாடலாம்: நிபுணர்கள்

2 mins read
862fe54e-a9ec-446d-af0a-71029cc01e49
தென்கொரியாவில் அக்டோபர் 30ஆம் தேதி நடந்த ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் (APEC) சந்தித்துக்கொண்ட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் ஸீ ஜின்பிங். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜப்பானுடன் நடந்துவரும் கருத்து வேறுபாட்டைத் தணிக்க சீனா அமெரிக்காவை நாடும் வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளில் ஆசியாவில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே தைவானால் ஏற்பட்டுள்ள மோசமான இருநாட்டுப் பிரச்சினையாக இது உருவெடுத்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த அந்த நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும், தைவான் குறித்த தனது நிலைப்பாட்டை அமெரிக்கா சற்று இணக்கமாக எடுத்துக்கொள்வதையும் சீனா எதிர்பார்ப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

திங்கட்கிழமை (நவம்பர் 24) சீன அதிபர் ஸி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் ஒரு மணி நேரம் தொலைபேசி உரையாடல் நடத்தியுள்ளார்.

நவம்பர் 7ஆம் தேதி தொடங்கிய தைவான் குறித்த ஜப்பானிய, சீன கருத்து வேறுபாடு பற்றிய எதுவும் அந்த உரையாடலில் பேசப்படவில்லை. தொலைபேசி அழைப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் ஜப்பான் பற்றி இருநாடுகளும் எதுவும் தெரிவிக்கவில்லை.

இருப்பினும், சீனாவே தொலைபேசி அழைப்பை முதலில் பரிந்துரைத்துள்ளது. அதன்படி, ஜப்பானுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்துவிடாமல் இருப்பதை சீனா உறுதிசெய்யப் பார்க்கிறது என்றனர் நிபுணர்கள்.

ஜப்பானுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் சீனாவுடனான அமெரிக்காவின் உறவும் பாதிப்படையக்கூடும் என்பதும் நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி, தோக்கியோவில் நிருபர்களிடம் பேசியபோது, சீன உறவு பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டபடி அவருடன் தாம் உரையாடியுள்ளதாகத் தெரிவித்தார். அதனை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தவில்லை.

பிரதமர் சானே தக்காய்ச்சி, தமது நாடாளுமன்றத்தில் பேசும்போது சீனா தைவானைத் தாக்கினால் ஜப்பான் பதிலுக்கு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கூறியதுதான் இந்தப் பூசலுக்குக் காரணம்.

அதன்பிறகு கடும் கண்டனம் தெரிவித்த சீனா, ஜப்பானுக்கு சீனர்கள் சுற்றுலா செல்வதைத் தடுத்து, ஜப்பானியக் கடல் உணவு இறக்குமதியை நிறுத்தப்போவதாக மிரட்டி, ஐக்கிய நாட்டுச் சபையிலும் அதன் கோபத்தைப் பதிவிட்டது.

அதற்குப் பதிலடியாக, ஜப்பானியத் தீவான யோனகுனியில் ஏவுகணைப் படைத்தளத்தை உருவாக்கப்போவதாக ஜப்பான் அறிவித்தது. வட்டாரத்தில் பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கை என்று சீனா அதனைக் குற்றஞ்சாட்டியது.

குறிப்புச் சொற்கள்