பேங்காக்: மியன்மாரில் மியாவாடி பகுதியில் செயல்பட்ட மோசடி நிலையங்களில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான சீன நாட்டினர் அவர்களுடைய சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
பிப்ரவரி 20ஆம் தேதி (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை தாய்லாந்து, சீனா, மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மேற்பார்வையிட்டனர்.
சட்டவிரோத நடவடிக்கைகளை அதிகாரிகள் முறியடித்து வருவதைத் தொடர்ந்து மோசடி நிலையங்களில் பணியாற்றியவர்களை நாடுகடத்தி வருகின்றனர்.
தாய்லாந்தின் துணைப் பிரதமரும் தற்காப்பு அமைச்சருமான பூம்தம் வெச்சாயாசாய், அந்நாட்டின் துணைத் தற்காப்பு அமைச்சர் ஜெனரல் நட்டாபோன் நர்க்பானிட், சீனாவின் துணை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் லியு சோங்யி, மியான்மாரின் துணை உள்துறை அமைச்சர் ஆங் கியாவ் கியாவ் ஆகியோர் பிப்ரவரி 20ஆம் தேதி மாலை தக் மாநிலத்தில் உள்ள மே சோட் விமான நிலையத்தில் இந்நடவடிக்கையைப் பார்வையிட்டனர்.
நாடுகடத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தடுத்துவைக்கப்பட்டவர்கள் பேருந்துகளின் மூலம் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கு தடைசெய்யப்பட்ட பொருள்கள், ஆபத்தான ஆயுதங்களுக்கான பரிசோதனை உட்பட பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர், அவர்கள் சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
நடவடிக்கையை மேற்பார்வையிட்ட பிறகு, மூன்று நாட்டுத் தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அப்போது, முத்தரப்பு ஒத்துழைப்பின் மூலம் வெற்றிகரமாக இந்த நடவடிக்கை நிறைவேற்றப்பட்டதை உறுதிப்படுத்தும் வகையில் மூவரும் இணைந்து கைக்குலுக்கினர்.
ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தைத் திரு பூம்தம் வலியுறுத்தியதோடு அமைச்சர்கள் மட்டத்தில் பல மாதங்களாக அதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.
எல்லைப் பாதுகாப்பு, அமலாக்கச் செயல்முறை ஆகியவற்றில் இருக்கும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு நாடும் தனியாக இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.
அனைத்து தரப்பினரும் ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையையும் உள்ளூர் சட்டங்களையும் மதித்து அவற்றைக் கடைப்பிடிப்பர் என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அடுத்த வாரத்திற்குள் முத்தரப்பு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

