தைப்பே: தைவானின் கிழக்குக் கடற்பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் விதமாகச் சீனா அதன் நடவடிக்கைகளை அதிகரித்திருப்பது, வட்டார நிலைத்தன்மைக்கும் சுதந்திரமான கடற்பயணத்துக்கும் மிரட்டலாக அமைந்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த ஜி7 மாநாட்டுக்குப் பிறகு அந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் இதனைக் கூட்டுப் பிரகடனமாக புதன்கிழமை (நவம்பர் 11) அறிவித்தன.
தைவானைத் தனக்குச் சொந்தமான பகுதி என எண்ணும் சீனா, அத்தீவின் கிழக்குக் கடற்பகுதியில் இவ்வாண்டு ஜூன் மாதம் தொடங்கி, அதன் கடலோரக் காவற்படையின் கண்காணிப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
தைவான் ஆட்சியாளர்கள் சீனாவின் இறையாண்மையை நிராகரிக்கின்றனர். அதோடு ராணுவம், துணை ராணுவம், பொது வளங்களைக் கொண்டு தீவைச் சூழ்ந்து கடல்வழியாக வெகுவிரைவில் முற்றுகையிடச் சீனா பயிற்சிகள் மேற்கொள்வதாகவும் தைவான் நம்புகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் தைவானின் கிழக்குக் கரையோரத்தில் சீனாவின் செயல்பாடுகள் குறித்து இதற்கு முன்பே கவலை தெரிவித்திருந்தபோதும் தற்போதைய ஒருங்கிணைந்த ஜி7 அமைப்பின் அறிக்கை மிகவும் வலுவானதாகக் கருதப்படுகிறது.
வட்டார நிலைத்தன்மை, சுதந்திரமான கடற்பயணம், அனைத்துலகக் கப்பல்துறையின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு கிழக்குத் தைவான் கடற்பகுதியில் சீனாவின் அதிகரித்துவரும் செயல்பாடுகள் பெரும் மிரட்டலாக உள்ளன என்று அந்த கூட்டறிக்கை தெரிவித்தது.
“அந்த வட்டாரத்தின் தற்போதை சூழலை மாற்ற முக்கியமாகப் பலவந்தமாகவோ, வற்புறுத்தியோ, அச்சுறுத்தியோ, மிரட்டியோ தன்னிச்சையாக எடுக்கப்படும் எந்த முயற்சிகளையும் எதிர்க்கிறோம் என்ற நிலைப்பாட்டை நாங்கள் மறுவுறுதிப்படுத்துகிறோம்,” என்று அறிக்கையில் உறுப்பு நாடுகள் தெளிவாக விளக்கியிருந்தன.
சீன வெளியுறவு அமைச்சு இந்தக் கூட்டறிக்கை குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. தைவானின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் சீனா அங்கீகரிப்பதில்லை.
