பெய்ஜிங்: தென் சீனாவில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் இலக்கியப் பாடம் கற்பிக்க திருவாட்டி டீனா லியூ பணியில் சேர்ந்தபோது அவரது வேலை ஒப்பந்தத்தில் வேலைத்தரம், உரிய அனுமதியின்றி வேலைக்கு வராமல் இருப்பது போன்ற எச்சரிக்கைகளைக் கண்டிருந்தார்.
பின்னர் மற்றோர் எச்சரிக்கை வரியையும் அவர் கண்டார்: பள்ளியின் அனுமதியின்றி வெளிநாடு சென்றால் பணிநீக்கம் செய்யப்படலாம்.
பணியாளர்களுக்கான தொடர்புக் குழுவில் இந்த விதிமுறையை மீண்டும் வலியுறுத்தும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
மேலதிகாரிகளிடமிருந்து வந்த விதிமுறைகளின்படி ஆசிரியர்கள், ஒழுங்குமுறை பற்றிய தங்கள் விழிப்புணர்வை வலுப்படுத்த வேண்டும் என்று அந்தக் குறுஞ்செய்தி குறிப்பிட்டது. “எந்த வெளிநாட்டுப் பயணங்களையும் நாங்கள் தற்போது அனுமதிக்க மாட்டோம்,” என்றும் அந்தக் குறுஞ்செய்தி குறிப்பிட்டது.
சீனா முழுவதும், இதுபோன்ற எச்சரிக்கைகள் பரவி வருகின்றன. அரசாங்க ஊழியர்களுடன் வெளிநாட்டினர் தொடர்பில் இருப்பதை மேலும் கட்டுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
பாலர் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், அரசுக்குச் சொந்தமான வர்த்தகப் பணியாளர்கள் பலர் தங்களது கடப்பிதழை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும்படி ஆணையிடப்பட்டனர்.
சில நகரங்களில், வேலையிலிருந்து ஓய்வுபெற்றவர்கள், தாங்கள் முன்பு ஒப்படைத்த கடப்பிதழ்களை மீண்டும் பெறுவதற்குப் பல்லாண்டுகளாகக் காத்திருக்க வேண்டியுள்ளது.
பல நகரங்களில் அரசுத்துறையில் பணிபுரிபவர்கள், தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பினாலும் அதிகாரிகளின் அனுமதி தேவைப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
வழக்கமான ஆய்வு, பரிமாற்றம், கல்வி ஆகியவை தொடர்பான வர்த்தகப் பயணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் கல்வி கற்றவர்கள் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் குறிப்பிட்ட பொதுத்துறை வேலைகள் சிலவற்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு, செலவுக் குறைப்பு உள்ளிட்டவற்றைக் காரணங்களாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் இந்தக் கட்டுப்பாடுகள் விரைவில் அதிகமாகி வருவதாக தி நியூயார்க் டைம்ஸ் இதழிடம் பேசியவர்கள் தெரிவித்தனர்.
அரசாங்க ஊழியர்களிடையே அரசியல் கட்டொழுங்கையும் சீன அரசின் அரசியல் கொள்கைமீதான பற்றுதலையும் வளர்க்க அரசாங்க அதிகாரிகள் முற்படுவதாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ கட்டுரை குறிப்பிடுகிறது.
பிற நாடுகள் வேவு பார்க்கும் மிரட்டல் குறித்து நெடுநாளாக சீனா மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து வருகிறது.
அதிருப்தியை வெளிநாட்டுச் சக்திகள் விதைக்க எண்ணுவதாகவும் அந்நாடு கருதுகிறது.

