பெய்ஜிங்: வரும் 2035ஆம் ஆண்டுக்குள் ‘வலுவான கல்வி தேசம்’ என்ற பெருமையைப் பெறும் நோக்கில் சீனா அதன் முதலாவது தேசிய அளவிலான திட்டத்தை வெளியிட்டுள்ளது.
கல்வி வளர்ச்சி, மேலும் ஆக்கபூர்வமான முறையில் புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்வது ஆகியவற்றின் தொடர்பில் அத்திட்டம் கைகொடுக்கும் என்று சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் சில பிரிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 19) திட்டத்தை வெளியிட்டன.
பல தரப்பினரை எளிதில் சென்றடையக்கூடிய உலகத் தரம்வாய்ந்த உயர்தர கல்விமுறையை உருவாக்குவது அதன் இலக்காகும்.
சீனாவின் மக்கள்தொகை தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக 2024ல் குறைந்திருப்பது கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களில் தெரிய வந்தது.
சீனாவின் பிறப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்தபோதும் மரண எண்ணிக்கை அதைவிட வேகமாக அதிகரித்தது. வரும் ஆண்டுகளில் நிலைமை மேலும் மோசமடையும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கல்விமுறை குறித்த அறிவிப்பு இடம்பெற்றது.
குழந்தைப் பராமரிப்பு, கல்வி ஆகியவற்றுக்கான செலவு அதிகமாக இருப்பது சீனர்கள் பலர் குழந்தை பெற்றுக்கொள்வதைத் தவிர்ப்பதற்கான முக்கியக் காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நிலையற்ற வேலைச் சூழல், மந்தமான பொருளியல் ஆகியவற்றின் தொடர்பில் அந்நாட்டைச் சேர்ந்த பலர் சவால்களை எதிர்நோக்கும் வேளையில் இந்நிலை உருவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

