வாஷிங்டன்: டிக்டாக் சமூக ஊடகத் தளத்தால் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அக்கவலை கூறப்படும் அளவுக்கு மோசமானதல்ல என்று கருத்துரைத்துள்ளார். புதன்கிழமையன்று (ஜனவரி 22) ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் அவ்வாறு சொன்னார்.
“இளையர்கள், சிறார் பைத்தியக்காரத்தனமான காணொளிகளைப் பார்ப்பதை வேவு பார்ப்பது சீனாவுக்கு அவ்வளவு முக்கியமானதா என்ன?” என்று திரு டிரம்ப் கூறினார்.
சீனாவில் உற்பத்தியான எல்லா மின்சாரப் பொருள்களும் வேவு பார்க்கும் ஆற்றலை கொண்டிருக்கக்கூடியவை என்றார் திரு டிரம்ப். அதேவேளை, அந்த அச்சுறுத்தலை அதிகம் ஏற்படுத்துபவற்றில் டிக்டாக் ஒன்றல்ல என்றும் அவர் கருத்துரைத்தார்.
“அவர்கள் தொலைபேசிகளை உற்பத்தி செய்கின்றனர், உங்களின் கணினிப் பாகங்கள் பலவற்றை உற்பத்தி செய்கின்றனர்,” என்று குறிப்பிட்ட அவர், “(டிக்டாக்கைவிட) அது பெரிய அச்சுறுத்தல் இல்லையா?” என்றும் சாடினார்.
தங்கள் பயனர்களை வேவு பார்ப்பதாகக் கூறப்படுவதையும் பயனர்களின் தரவுத் தகவல்களை பெய்ஜிங்கிடம் ஒப்படைப்பதாகச் சொல்லப்படுவதையும் டிக்டாக் மறுத்து வருகிறது.