இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம்

இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா விருப்பம்

1 mins read
55d2fbc0-f668-43e2-a110-1790440d04ec
இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து செயல்படுவது தெற்கு உலகிற்கு நலன் விளைவிக்கும் என்றார் வாங் யி. - படம்: சைனாடெய்லிஏசியா
Google News Preferred Icon

பெய்ஜிங்: இந்தியா-சீனா இடையேயான உறவுகள் மேம்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிலைமை நீடிக்க வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

தெற்கு உலகிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தவும் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்கவும் இந்தியாவும் சீனாவும் சரியான உத்திபூர்வக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

பெய்ஜிங்கில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு நாடுகளும் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதுடன் அண்டை நாடுகளுடனான நட்பையும் நிலைநிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

கசான் (Kazan) சந்திப்பின் மூலம் இந்திய-சீன உறவுகள் புதிய தொடக்கத்தைக் கண்டதாகக் குறிப்பிட்ட அவர், தியான்ஜினில் நடந்த சந்திப்பின்வழி உறவுகள் மேலும் மேம்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து செயல்படுவது தெற்கு உலகிற்கு நலன் விளைவிக்கும் என்றார் வாங் யி.

இரு நாடுகளின் வளர்ச்சிக்கு இருதரப்பு நம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகியவை நன்மை பயக்கும் எனில், பிரிவினையும் மோதலும் ஆசியாவின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் வாங் யி எச்சரித்தார்.

மேற்காசியப் போர்ச் சூழலில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா முன்வந்துள்ளது அனைத்துலக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.

“பிரிக்ஸ் தலைமைப் பதவியிலும் இரு நாடுகளும் அடுத்த இரண்டாண்டுகளுக்கு ஒன்றுக்கொன்று ஆதரவளிக்க வேண்டும். ஒருங்கிணைந்தால், நாம் தெற்குலகுக்கு புது நம்பிக்கையை கொண்டு வரலாம்,” என்றார் வாங் யி.

குறிப்புச் சொற்கள்
இந்தியாசீனாஉறவுஇருதரப்பு உறவுவெளியுறவு அமைச்சர்பிரிக்ஸ்அமைப்பு