2028 ஐநா பருவநிலை மாநாட்டை நடத்தும் போட்டியிலிருந்து விலகிய சீனா

2028 ஐநா பருவநிலை மாநாட்டை நடத்தும் போட்டியிலிருந்து விலகிய சீனா

படம்: இபிஏ

16 Nov 2026 - 2:04 pm

2 mins read

பெய்ஜிங்: 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐக்கிய நாட்டு நிறுவனப் (ஐநா) பருவநிலை மாநாட்டை ஏற்றுநடத்தும் போட்டியில் இருந்து சீனா அதிகாரப்பூர்வமாக விலகியது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் அதே காலகட்டத்தில் அந்த மாநாடு நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து சீனாவின் உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அந்தக் கூட்டத்தில் 2028ஆம் ஆண்டுக்கான பருவநிலை மாநாட்டை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கெடுக்கவோ விண்ணப்பிக்கவோ வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், அந்த முடிவிற்கான காரணத்தை அவை குறிப்பிடவில்லை.

உலகின் ஆகப் பெரிய கரிம வெளியேற்ற நாடாக சீனா இருப்பதால், அது முன்னின்று அந்த மாநாட்டை நடத்த வேண்டும் எனப் பருவநிலை ஆர்வலர்கள் எதிர்பார்த்தனர். அதனால், சீனாவின் இந்த முடிவு பலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இது குறித்து நவம்பர் 13ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங், 2028ஆம் ஆண்டுக்கான பருவநிலை மாநாடு தொடர்பில் அறிவிப்பதற்குத் தம்மிடம் தகவல் இல்லை எனக் கூறினார்.

மேலும், பசுமை, குறைந்த கரிம வெளியேற்றத்திற்கான திட்டங்களை முன்னெடுக்கவும் அனைத்துலக ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் சீனா கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டுக்கான ‘காப் 31’ பருவநிலை மாநாடு தற்போது துருக்கியின் அன்டால்யாவில் நடந்து வருகிறது. 2027ஆம் ஆண்டு மாநாட்டை எத்தியோப்பியா நடத்தவுள்ளது.

சுழற்சி முறையில் 2028ஆம் ஆண்டு மாநாட்டை ஆசிய-பசிபிக் நாடுகள் நடத்த வேண்டும்.

இந்தியா கடந்த ஏப்ரல் மாதம் தனது விருப்பத்தைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, இதுவரை எந்த நாடும் அதிகாரபூர்வமாகப் போட்டியிடவில்லை.

தென்கொரியா தனது தயக்கத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், கஸக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தோனீசியா ஆகிய நாடுகள் மாநாட்டை நடத்த ஆர்வம் காட்டியுள்ளன.

குறிப்புச் சொற்கள்