ஹெஃபெய்: சீனாவின் கிழக்குப் பகுதியில் வெயில் கடுமையாக உள்ளது.
சுட்டெரிக்கும் வெயில் காரணமாகப் பகல் நேரத்தில் விலங்கியல் தோட்டத்துக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.
இதனால் இரவுநேர சுற்றுலாக்களுக்கு அப்பகுதியில் உள்ள விலங்கியல் தோட்டங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
ஹெஃபெய் வனவிலங்குப் பூங்கா முதல்முறையாக இரவுநேர சுற்றுலாவுக்காகத் திறந்துவிடப்பட்டது.
ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து அங்கு இரவுநேர சுற்றுலாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இரவு நேரத்தில் கண் விழித்து இரை தேடும் விலங்குகளை நேரில் பார்க்கும் அரிய வாய்ப்பு பொதுமக்களுக்குக் கிடைத்துள்ளது.
இந்த இரவுநேர சுற்றுலாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
முதல் வாரத்திலேயே ஆயிரக்கணக்கானோர் அதில் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவு நிலவரப்படி, இதுவரை 4,000 பேர் கட்டணம் செலுத்தி இரவுநேர சுற்றுலாவில் கலந்துகொண்டு மகிழ்ந்ததாக ஹெஃபெய் வனவிலங்குப் பூங்கா கூறியது.
இரவுநேர சுற்றுலாவில் கலந்துகொள்பவர்களுக்கான நுழைவுச்சீட்டுக் கட்டண விலையை அது குறைத்துள்ளது.
பகல்நேரத்தில் விலங்கியல் தோட்டத்துக்குச் செல்பவர்கள் 35 யுவான் கட்டணம் செலுத்த வேண்டும்.
இரவுநேர சுற்றுலாவுக்குச் செல்பவர்களுக்கான கட்டணம் 29.9 யுவான் (S$5.50).
ஷங்காய், ஜியாங்சு, ஷான்டோங் ஆகிய இடங்களில் உள்ள விலங்கியல் தோட்டங்களும் இரவுநேர சுற்றுலாவை நடத்தி வருகின்றன.
ஷங்காய் விலங்கியல் தோட்டம் ஜூன் 1ஆம் தேதியன்று இரவுநேர சுற்றுலாவைத் தொடங்கியது.
சில இடங்களில் வாகனங்கள் உள்ளே செல்ல அது அனுமதித்துள்ளது.
வாகனங்களில் இருந்தவாறு விலங்குகளைப் பார்த்து ரசிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரவுநேர சுற்றுலாக்கள் அக்டோபர் 7ஆம் தேதி வரை நடத்தப்படும்.
இரவுநேரக் காட்சிக்குப் பொருத்தமில்லாத விலங்குகள் இருக்கும் இடங்கள், இரவுநேர சுற்றுலாக்களின்போது மூடப்பட்டிருக்கும் என்று ஹெய்ஃபெய் வனவிலங்குப் பூங்கா ஊழியரான திருவாட்டி வாங் ஹுய்ஹுய் தெரிவித்தார்.
இரவுநேர சுற்றுலா மாலை 5.30 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரை நாள்தோறும் நடைபெறும் என்றார் அவர்.

