தைப்பே: தைவான்மீது சீனா நடத்திய இணையத் தாக்குதலின் விகிதம் கடந்த ஆண்டு ஆறு விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தைவானின் தேசியப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க தைவானின் மருத்துவமனைகள் தொடங்கி வங்கிகள் வரை சீனா சராசரியாக 2.63 மில்லியன் இணையத் தாக்குதல்களைக் கடந்த ஆண்டு மேற்கொண்டது.
தைவானின் செயல்பாட்டை முடக்க சீனா நடத்தும் ராணுவப் பயிற்சிகளுடன் சேர்த்து இணையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தேசியப் பாதுகாப்புப் பிரிவு கூறியது.
தன்மீது சீனாவுக்கு உரிமை இருக்கிறது என்பதைத் தைவான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சீனா அண்மைய ஆண்டுகளில் ராணுவப் பயிற்சிகளையும் இணையத் தாக்குதல்களையும் மேற்கொள்வதாகத் தைவான் சொன்னது.
2023ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க சீனாவின் இணையத் தாக்குதல்கள் கடந்த ஆண்டு 113 விழுக்காடு கூடியதாகத் தைவான் குறிப்பிட்டது.
எரிசக்தி, அவசர மீட்பு, மருத்துவமனைகள் போன்ற பல்வேறு துறைகள் இணையத் தாக்குதல்களுக்கு ஆளாகின.
“தைவானின் அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை முடக்க சீனா கடுமையாக முயல்வதை அது காட்டுகிறது. தைவான் அரசாங்கத்தை முடக்க சீனா முற்படுகிறது,” என்று தேசியப் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கை சொன்னது.
ஒவ்வொரு முறையும் சீனா ராணுவப் பயிற்சிகளை நடத்தும்போது இணையத் தாக்குதல்களும் அதேவேளை நடத்தப்படுவதைத் தைவான் கண்டறிந்தது.
தொடர்புடைய செய்திகள்
தைவானிய அதிபர் லாய் சிங் த, அரசாங்கத்தில் முதல் நாளைத் தொடங்கியபோது உரையாற்றியது போன்ற முக்கிய அரசியல் தருணங்களின்போதும் சீனா இணைய ரீதியான தாக்குதலை நடத்தியது
தைவானின் கூற்றுக்குச் சீனாவின் தைவானிய விவகார அலுவலகம் எந்தப் பதிலும் கூறவில்லை.
இணையத் தாக்குதலில் ஈடுபடுவதாகக் கூறப்படுவதைச் சீனா வழக்கமாகவே மறுத்துவருகிறது.
தைவான் சீனாவுக்குத்தான் சொந்தம் என்ற கூற்றை முழுமையாகப் புறக்கணிக்கும் தைவான், தைவானியர்கள் அவர்களுக்கான எதிர்காலத்தை அவர்களே தீர்மானித்துக்கொள்வர் என்றது.

