யோனகுனி/ நாஹா (ஒக்கினாவா): தைவானுக்கு அருகே மிதவைகள், ஆளில்லா வானூர்திகள், போர்க்கப்பல்களை சீனா நிறுத்தியிருப்பதால் அவ்வட்டாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஹோனகுனி தீவுக்கு அருகே தைவானை அச்சுறுத்தும் வகையில் தனது நடவடிக்கைகளை சீனா தீவிரமாக்கியிருக்கிறது. இந்தத் தீவு, ஜப்பானின் மேற்கு முனையில் இருக்கிறது. இதனால் ஜப்பானும் விழிப்புடன் இருந்து வருகிறது.
கடந்த டிசம்பர் 2024ல் ஜப்பான் தனது சிறப்பு பொருளியல் வட்டாரத்துக்குள் சீனா மிதவைகளை நிறுவியிருப்பதைக் கண்டுபிடித்தது. அவற்றை அகற்ற வேண்டும் என்று சீனாவிடம் ஜப்பான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சிறப்புப் பொருளியல் வட்டாரத்துக்குள் மீன் பிடிக்கவும் துளைகளை இடவும் ஜப்பானுக்கென தனிப்பட்ட உரிமை இருக்கிறது.
ஆனால் மிதவைகளை அகற்ற மறுத்த சீனா, சட்டப்படி நிறுவியிருப்பதாகவும் வானிலை கண்காணிப்புக்காக அவற்றை அங்கு வைத்திருப்பதாகவும் கூறியுள்ளது.
ராணுவ நிபுணர்கள், மிதவைகளை தீய நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
2023ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வான்வெளியில் சீனாவின் வெண்ணிற பலூன்கள் பறந்தன. அது, வானிலை ஆய்வுக்கான பலூன்கள் என சீனா கூறினாலும் உளவு பலூன்கள் என அமெரிக்கா பின்னர் மதிப்பிட்டது.
அதே போன்று மிதவைகள் பயன்படுத்தப்படலாம் என்று நிபுணர்கள் கருகின்றனர்.
மிதவைகளால் பதிவு செய்யப்படும் கடல்மேற்பரப்பின் காற்றின் வேகம், திசை போன்ற தரவுகளை சீனாவின் கடற்படை தங்களுக்குச் சாதமாகவும் கண்காணிப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
சிறப்புப் பொருளியல் வட்டாரத்துக்குள் தனது அனுமதியில்லாமல் கட்டமைப்புகளை சீனா நிறுவியிருப்பது ஐநா கடல் சட்ட விதிகளை மீறியதாகும் என ஜப்பான் வாதிடுகிறது.
ஆனால், கட்டமைப்புகள், குறிப்பாக அறிவியல் ஆய்வுக்காக ‘நியாயமாக, சட்டபூர்வமாக’ நிறுவப்பட்டுள்ளது என்று சீனா கூறுகிறது.

