ஷங்காய்: ஏற்றுமதிகள் தொடர்பாகச் சீனா விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்கள், கணினிச் சில்லுகள், கவச வாகனங்கள், போர் விமானங்கள் போன்றவற்றின் ஏற்றுமதிகளுக்குச் சீனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன்மூலம் அமெரிக்காவுக்கு எதிராக மட்டுமின்றி, ஐரோப்பாவுக்கும் எதிரான புதிய வர்த்தகப் போர் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் நவம்பர் 8ஆம் தேதியிலும் டிசம்பர் 1ஆம் தேதியிலும் கட்டங்கட்டமாக நடப்புக்கு வரும்.
இவை உலக நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும்.
சீன இறக்குமதிகளுக்கு எதிராக நவம்பர் 1லிருந்து புதிதாக 100 விழுக்காட்டு வரிகளை விதிக்கப்போவதாக அக்டோபர் 10ல் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
அரிய வகை கனிம வளங்கள் ஏற்றுமதியில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது.
அதன் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் முயன்று வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
அக்டோபர் 9ஆம் தேதியன்று சீனா சில அறிவிப்புகளைச் செய்தது.
தற்போதைய, நவீன வாழ்க்கை முறையுடன் இன்றியமையாத அம்சங்களாகிவிட்ட மின்சார வாகனங்கள், கணினிச் சில்லுகள் உட்பட வேறு சில பொருள்களின் ஏற்றுமதிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சீனா தெரிவித்தது.
இப்பொருள்கள் பெரும்பாலும் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளின்கீழ் சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களைப் பயன்படுத்தி மற்ற நாடுகள் ராணுவத்துக்குத் தேவையான சாதனங்களை உற்பத்தி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மேற்கத்திய நாடுகள் அதிருப்தி அடைந்துள்ளன. சீனா விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் உக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்ப முடியாத நிலை ஏற்படக்கூடும் என்றும் ரஷ்யாவிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ராணுவ ஆற்றலை மேம்படுத்த முடியாத நிலை ஏற்படக்கூடும் என்றும் மேற்கத்திய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.