ஜப்பானிய போர் விமானங்களைச் சீன ராணுவம் குறிவைத்ததாகக் குற்றச்சாட்டு

2 mins read
e443fce8-ecb1-428b-9c65-fdbc1f737f58
சீனாவின் ‘ஷெங்யாங் ஜெ-15’ ரக போர் விமானம். - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: ஒக்கினாவா தீவின் தென்கிழக்குப் பகுதியில் தனது போர் விமானங்களைச் சீன ராணுவம் மின்காந்த ‘ரேடார்’ கருவிகளைக்கொண்டு குறிவைத்தது என்று ஜப்பானியத் தற்காப்பு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 7) குற்றஞ்சாட்டியுள்ளது.

மிகவும் அபாயகரமான, வருந்தத்தக்கச் செயல் என்று அதனைக் குறிப்பிட்ட தற்காப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி, அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் இதுபோன்ற செயல்களைச் சீனா நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஜப்பான் தமது கடுமையான கண்டனத்தைச் சீனாவிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சனிக்கிழமை நடந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ சேதங்களோ ஏற்படவில்லை என்று தற்காப்பு அமைச்சு உறுதிசெய்தது.

போர் விமானங்கள் பொதுவாக அவற்றின் ரேடார் கருவிகளை மற்ற எதிரி விமானங்களைத் தாக்குவதற்குப் பயன்படுத்தும். அதேசமயம் பேரிடர் காலங்களில் தேடுதல், மீட்புப் பணிகளுக்கும் அவை பயன்படுவது உண்டு.

ஒக்கினாவா தீவின் கடற்பகுதியில் நடந்த முதல் இருநாட்டுப் பூசலாக இது கருதப்படுகிறது. சீனக் கடற்படையின் விமானந்தாங்கிக் கப்பலான ‘லியாவ்நிங்’கிலிருந்து அப்பகுதிக்கு ஒரு ஜெ-15 ரக போர் விமானம் ஏவப்பட்டுள்ளது.

அவ்விமானம் எல்லைமீறி ஜப்பானிய வான்பகுதிக்குள் நுழைந்ததால், ஜப்பான் தனது வான் தற்காப்புப் படையின் எஃப்-15 வகை விமானத்தை அனுப்பியது. அப்போது, சீன விமானம் தனது ரேடார் கருவியைக் கொண்டு ஜப்பானிய விமானத்தைக் குறிவைத்ததாகச் சொல்லப்படுகிறது.

அது நடந்த இரண்டு மணிநேரத்தில் தனது இன்னொரு போர் விமானத்தையும் சீன விமானம் குறிவைத்தது என்று ஜப்பானியத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பாக விமானங்கள் பயணம் செய்வதைக் கடந்து, இத்தகைய செய்கை மிகவும் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமைச்சு கவலை தெரிவித்தது. தைவான் தற்காப்பு குறித்து ஜப்பான் பிரதமர் அண்மையில் கருத்து வெளியிட்ட பிறகு சீனாவுடனான உறவுகள் கசப்பாகியுள்ளன.

குறிப்புச் சொற்கள்