சீனப் பொருளியல் வளர்ச்சி: கணிப்புகளை எட்டத் தவறியது

சீனப் பொருளியல் வளர்ச்சி: கணிப்புகளை எட்டத் தவறியது

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

16 Nov 2026 - 5:32 pm

2 mins read

பெய்ஜிங்: சீனாவின் பொருளியல் வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்ட முன்னுரைப்புகளை எட்டத் தவறியுள்ளது. அத்துடன், அந்நாட்டின் அனைத்துத் துறைகளிலும் பரவலான மந்தநிலை ஏற்பட்டுள்ளதாகப் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயனீட்டாளர்கள் பொருள்கள் வாங்குவதும் தொழில்துறை உற்பத்தியும் எதிர்பார்ப்புகளைவிடக் குறைவாகப் பதிவாயின. முதலீடுகளும் எதிர்பாராத விதமாகச் சரிந்தன. இவற்றால் அக்டோபர் மாதத்தில் சீனாவின் பொருளியல் வளர்ச்சி அனைத்துத் துறைகளிலும் பலவீனமடைந்துள்ளது.

பெய்ஜிங்கின் அண்மை ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இன்னும் பொருளியலில் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்பதையே இது காட்டுவதாகக் கூறப்பட்டது.

சில்லறை விற்பனை, கடந்த ஆண்டைவிட 0.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது புளூம்பெர்க் நடத்திய ஆய்வில் பொருளியல் வல்லுநர்கள் கணித்த 0.8 விழுக்காடு என்ற சராசரி எதிர்பார்ப்பைவிட மிகக் குறைவு. செப்டம்பர் மாதத்தில் இது 1.1 விழுக்காடாக அதிகரித்திருந்தது.

2026ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் நிலையான சொத்து முதலீடு, சென்ற ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 8.1 விழுக்காடு சரிந்துள்ளது. பொருளியல் வல்லுநர்கள் எதிர்பார்த்த 7 விழுக்காட்டு வீழ்ச்சியைக் காட்டிலும் இது அதிகம். ஜனவரி-செப்டம்பர் காலகட்டத்தில் முதலீடு 7.2 விழுக்காடு குறைந்திருந்தது.

அக்டோபர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி, கடந்த ஆண்டைவிட 4.8 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. இது 5.3 விழுக்காடு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பை எட்டத் தவறியதுடன், செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் குறைவு.

செப்டம்பர் மாத இறுதியில் வளர்ச்சியை ஊக்குவிக்கப் பெய்ஜிங் தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்திய பிறகும், பொருளியல் வேகமிழந்து வருவதையே இந்தத் தரவுகள் காட்டுகின்றன. அடைமான மானியம், அதிகப்படியான பொதுக் கடன் வரம்பு ஆகியவற்றை உள்ளடக்கிய மிதமான ஊக்கத்தொகைத் திட்டத்தை அதிகாரிகள் அறிமுகப்படுத்தியதோடு, முதலீட்டை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளையும் விரைவுபடுத்தினர்.

பொருளியல், ஒட்டுமொத்தமாக நிலையாக உள்ளது என்றும் வளர்ச்சி ஆதாரங்களைப் புதுப்பித்து, அதன் கட்டமைப்பை மேம்படுத்தும் போக்கை நீட்டித்துள்ளது என்றும் தேசியப் புள்ளிவிவரத் துறை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

நிச்சயமற்ற உலகளாவிய சூழல், தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையிலான சமநிலையின்மை, அத்துடன் சில வணிகங்களின் செயல்பாட்டில் உள்ள சிரமங்கள் ஆகியவை பொருளியல் எதிர்கொள்ளும் சவால்கள் என்று அது சுட்டியது.

குறிப்புச் சொற்கள்